திருத்துறைப்பூண்டி அருகே நடந்த சாலை விபத்தில் பலியான 8 பேர் குடும்பத்துக்கு ரூ.10.40 லட்சம் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி வட்டம் ஆலங்காடு கிராமத் தைச் சேர்ந்தவர்கள் ஒரு திருமணத்திற்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில் உப்பூர் கிராமத்தில் அவர்கள் பயணம் செய்த வேன் லாரியுடன் மோதி ஏற்பட்ட சாலை விபத்தில் செந்தில்குமார், தனபாக்கியம், லட்சுமி, வனரோஜா, நித்தியா, சரோஜா, தனலட்சுமி, சந்தான லட்சுமி ஆகிய 8 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த துயரச்சம்பவம் குறித்த செய்தி அறிந்ததும் முதலமைச்சர் கருணாநிதி அதிர்ச்சியும், வேதனையும் அடைந்து உயிரிழந்தவர்களின் குடும்பங் களுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் சரோஜா தமிழ் நாடு விவசாயத் தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராகச் சேர்ந்துள்ளதால் உறுப்பினர் விபத்து நிவாரணத் திட்டத்தின் கீழ் அவரது குடும்பத் திற்கு ஒரு லட்ச ரூபாயும், உயிரிழந்தவர்களில் மற்ற 7 பேர் குடும்பங்களுக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தலா ஒரு லட்சம் ரூபாய் வீதமும், காயம் அடைந்தவர்களுக்குத் தலா பத்தாயிரம் ரூபாய் வீதமும் மொத்தம் 10 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.