''மக்களவைத் தேர்தல் வந்தால் 40 தொகுதிகளிலும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடும்'' என அக்கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மக்களவைத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். தமிழக மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தும் எங்கள் முயற்சி நிச்சயம் வெற்றி பெறும். அ.இ.அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி பூதாகரமாகத் தெரிந்தாலும், மனவலிமை, கொள்கை உறுதி, உழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றியைப் பெறுவோம்.
மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் எங்கள் கட்சி தனித்தே போட்டியிடும். எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கமாட்டோம். மேலும், 27 தொகுதிகளுக்குப் போட்டியிடும் நபர்கள் கூட உத்தேசமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பால் கொள்முதல் விலை உயர்வால் கிராமப்புற விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும் என்பதால், அரசின் இந்த அறிவிப்பை வரவேற்கிறேன். அதேவேளை ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்துவதற்குப் பதிலாக பால் உப பொருள்களான நெய், தயிர், வெண்ணெய், ஐஸ்கிரீம் ஆகியவற்றின் விலையை அரசு உயர்த்தி இருக்கலாம்.
பல ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும் முல்லைப் பெரியாறு அணை, காவிரி நீர்ப் பங்கீடுப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண தமிழகத்தில் உறுதியான அரசு அமைய வேண்டும். தற்போதைய மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து அமெரிக்காவுக்கு விசா பெற திரைப்படத் துறையைச் சேர்ந்த 200 பேர் முயன்றதாக அந்த நாட்டு துணைத் தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.இதனால் திரைப்படத் துறையினர் மீது தேவையற்ற களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்கள் யார் என்ற விவரத்தையும் தெரிவிக்க வேண்டும். இப்பிரச்னையில் சிக்கியுள்ள நடிகை புளோரா நடிகர்கள் சங்க உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.