சிதம்பரத்தில் கைதானவர்களை விடுவிக்க முதல்வர் உத்தரவு!
புதன், 5 மார்ச் 2008 (16:14 IST)
சிதம்பரம் நடராஜர் கோயில் சித்சபை திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட தமிழ்த் திருமறைகளை ஓதும் விவகாரத்தில் கைதானவர்களை விடுதலை செய்யத் தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் திருச்சிற்றம்பல மேடையில் பக்தர்கள் தேவாரம் பாடலாம் என்று இந்து அறநிலையத் துறைச் செயலர் கோ.சந்தானம் கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கடந்த 2 ஆம் தேதி சிவனடியார் ஆறுமுகசாமி, மனித உரிமைப் பாதுகாப்பு இயக்கம், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த ஆதரவாளர்களுடன் பாடச் சென்றார்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கோயில் தீட்சிதர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி சிவனடியார் ஆறுமுகசாமியை திருச்சறிறம்பல மேடைக்கு அழைத்துச் சென்று தேவாரம் பாட வைத்தனர். ஆனால், தீட்சிதர்கள் சிவபெருமானைப் பார்க்கவிடாமல் தடுத்துத் தன்னைத் தாக்கியதாக ஆறுமுகசாமி புகார் கூறினார்.
பின்னர் அன்று மாலை மீண்டும் ஆறுமுகசாமி தனது ஆதரவாளர்களுடன் பாடச்சென்ற போது தடுத்த காவலர்களின் மீது கல்வீச்சு நடந்தது.
இதையடுத்து, அரசு உத்தரவை நிறைவேற்றச் சென்ற காவலர்களைப் பணிசெய்ய விடாமல் தடுத்ததாக தீட்சிதர்கள் 12 பேரும், வன்முறையைத் தூண்டியதாக ஆறுமுகசாமி, அவரின் ஆதரவாளர்கள் உள்பட 34 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.