தமிழகத்தில் வருவாய் மற்றும் வேலைவாய்ப்புத்துறையில் ஊழல் மலிந்துவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் குற்றம்சாற்றியுள்ளார்.
கோவையில் பிப்ரவரி 29ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு தொடங்குகிறது. சென்னையை அடுத்த பொழிச்சலூரில் இந்த மாநாட்டுக்காக நிதி வசூல் பிரசாரக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் என். வரதராஜன் பேசுகையில், நாட்டில் விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசே பொறுப்பு.
விலைவாசியை குறைக்கும் வகையில் வரிவிதிப்பில் திருத்தங்கள் செய்வது தொடர்பாக அளிக்கப்பட்ட பரிந்துரை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் படிக்கவில்லை. பொருளாதாரம் நல்ல நிலைமையில் இருப்பதாகக் கூறி அவர் செய்யும் வரிவிதிப்புகள் விலைவாசியை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளன.
இந்தியா பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்யும் இடத்திலேயே கொள்முதல் செய்யும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது. ஆனால், இந்தியாவில் மட்டும் விலை உயர்வு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
விவசாயிகள் தற்கொலை செய்துக்கொள்வதற்கான காரணங்கள் குறித்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான குழுவின் அறிக்கை வெளியிடப்படவில்லை.
தமிழகத்தில் வருவாய், வேலைவாய்ப்புத்துறை ஆகியவற்றில் ஊழல் மலிந்துவிட்டது. இதனால் ஏழை எளிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொது பிரச்னைகளுக்காக ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்குவதில் காவல்துறையினர் அடக்குமுறை நோக்கத்தில் செயல்படுகின்றனர். இது குறித்து விரைவில் முதல்வர் கருணாநிதியிடம் புகார் தெரிவிக்கப்படும் என்று வரதராஜன் கூறினார்.