கல்வி உதவித் தொகையை பழைய முறையிலேயே தொடர்ந்து வழங்க வலியுறுத்தி தலைமைச் செயலகம் நோக்கி பேரணி செல்ல முயன்ற சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் 40 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பள்ளி, கல்லூரியில் படிக்கும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் 60 விழுக்காடு மதிப்பெண் பெறுபவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்த போது சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் தலைமைச் செயலகத்துக்குள் நுழைய முயன்றனர். அதில் ஒரு மாணவர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் 40 பேர் சென்னை வந்தனர். அவர்கள் காலை 11 மணிக்கு கடற்கரை சாலை கண்ணகி சிலை அருகேயும், அண்ணா சதுக்கம் அருகிலும், மெரினா நீச்சல் குளம் அருகிலும் திரண்டனர். அவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி செல்ல முயன்றனர்.
அவர்களை காவல்துறையினர் தடுக்க முயன்றனர். அதையும் மீறி மாணவர்கள் செல்ல முயன்றனர். இதனால் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.