சம்பள உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்!
புதன், 6 பிப்ரவரி 2008 (14:35 IST)
ஈரோடு அருகே சம்பள உயர்வு, போனஸ் வழங்க கோரி விசைத்தறி தொழிலாளர்கள், நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் தவிட்டுபாளையத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைத்தறி செயல்படுகின்றன. இத்தறிகளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். லுங்கி, காட்டன் வேட்டி, எடப்பாடி வேட்டி, ஆர்.ஜி., ரக வேட்டி, சிங்கப்பூர் பாலியஸ்டர், சைசிங், காடா பீஸ், சுடிதார், பேன்ஸி கர்ச்சிப்கள் உள்ளிட்ட துணி ரகங்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த துணி வகைகளில் பெரும்பாலும் அந்தியூரில் இருந்து அயல்நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அரசு 500 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குகிறது. இருப்பினும் விசைத்தறி கூடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, போனஸ் வழங்கவில்லை.
சம்பள உயர்வு, போனஸ் வழங்க வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று தவிட்டுப்பாளையத்தில் பெரும்பாலான விசைத்தறிகள் இயங்கவில்லை.