தாராபுர‌த்‌தி‌ல் கோழி தீவனமாகு‌ம் ரேஷ‌ன் அ‌ரி‌சி!

புதன், 6 பிப்ரவரி 2008 (14:34 IST)
ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆதரவுடன் இரண்டு ரூபாய் ரேஷன் அரிசியை கடத்தி கோழித்தீவனமாக உருமாற்றி ரூ. 12க்கு விற்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டம், தாராபுரம் தாலுகாவில் மொத்தம் 142 ரேஷன் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் 95 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடு‌ம்ப அ‌ட்டைக‌ள் உள்ளன. தமிழக அரசு ஏழை, எளிய குடும்பங்களின் நலன் கருதி, ஒரு குடு‌ம்ப அ‌ட்டைக்கு 20 கிலோ அரிசி கிலோவுக்கு ரூ.2 விலையில் வழங்கி வருகிறது.

அரசு மானியவிலையில் வழங்கும் ரேஷன் அரிசியை 40 ‌விழு‌க்காடு கார்டுதாரர்களே வாங்குகின்றனர். இங்கும் அரிசியை சாதத்தை விட, இட்லி, தோசை‌க்கு அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் ‌‌நியாய‌விலை‌க் கடையில் மொத்த ஒதுக்கீட்டில் 20 முதல் 30 ‌விழு‌க்காடு அரிசி மீதமாகிறது. இதை கிலோ ரூ.5க்கு புரோக்கர்களிடம் ஊழியர்கள் விற்பனை செய்கின்றனர்.

ரேஷன் அரிசியை புரோக்கர்கள் எட்டு ரூபாய்க்கு கோழித்தீவனம் அரைக்கும் ஆலைகளுக்கு விற்பனை செய்கின்றனர். ஆலையில் மக்காச்சோளத்துடன், ரேஷன் அரிசியை சேர்‌‌த்து அரைத்து கால்நடை தீவனமாக உருமாற்றி விடுகின்றனர். கிலோ ரூ.12 முதல் ரூ.15க்கு கடைகளில் விற்பனை செய்கின்றனர்.

தாராபுரம் தாலுகாவில் இருந்து வாரத்துக்கு மூன்று லோடு ரேஷன் அரிசி கேரளாவுக்கும் ஒரு லோடு அரிசி கால்நடை தீவனம் மற்றும் கோழித்தீவனமாகவும் கடத்தப்படுகிறது.

இதேபோல் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் பகுதியில் விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு ரேஷன் அரிசியை மாவாக அரைத்து கொடுக்கும் நிலையும் நடைபெறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்