பவானியில் கைத்தறி ஆராய்ச்சி மையம் அமைக்க கோரிக்கை!
புதன், 6 பிப்ரவரி 2008 (14:31 IST)
'ஜமுக்காள ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக ஈரோடு அருகே உள்ள பவானியில் கைத்தறி ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
அகில இந்திய கைத்தறி வாரிய ஆலோசனைக் குழு கூட்டம், மும்பையில், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சங்கர்சிங் வகேலா தலைமையில் நடந்தது. இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை வகித்தார். பவானியைச் சேர்ந்த மாணிக்கம் உட்பட தமிழக கைத்தறி வாரிய உறுப்பினர்கள் ஐந்து பேர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பவானி மாணிக்கம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பாரம்பரியம் மிக்க பவானி ஜமுக்காளம், மத்திய அரசின் காப்புரிமம் பெற்றிருந்தும், ஏற்றுமதி செய்ய அங்கீகாரம் அளிக்கப்படாமல் இருந்து வருகிறது. எனவே ஏற்றுமதிக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். அரசின் சார்பில் கைத்தறி ஆராய்ச்சி மையம் அமைத்து ஜமுக்காள நெசவாளர்களுக்கு புதிய பயிற்சி அளிக்க வேண்டும்.
கூட்டுறவு துறை சாராத நெசவாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை தயாரிப்பில் பங்களிக்க வேண்டும். கல்விக் கடன் வழங்குவது போல், நெசவாளர்களுக்கு நிபந்தனையற்ற கடன் வழங்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.