இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் குறித்து ஜப்பான் நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் நாட்டு தலைநகர் டோக்கியோ சென்றுள்ளார்.
இதற்காக, சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு அவர் விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். நேற்று காலை 6 மணிக்கு அவர் சிங்கப்பூர் சென்றடைந்தார். அங்கிருந்து காலை 9.50 மணிக்கு விமானம் மூலம் ஜப்பான் தலைநகர் டோக்கியோ புறப்பட்டுச் சென்றார். மாலை 5.20 மணிக்கு டோக்கியோ சென்றடைந்தார்.
டோக்கியோவில் தங்கியுள்ள அவர் இன்று பகல் 11.30 மணிக்கு ஜப்பான் நாட்டு வங்கி பொது இயக்குனர் டி.சியோகுச்சியை சந்தித்து பேசுகிறார். நாளை டோக்கியோ மெட்ரோ இரயில் திட்டத்தையும், புல்லட் இரயிலையும் பார்வையிடுகிறார்.
8ஆம் தேதி இரவு 7 மணிக்கு டோக்கியோவில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்படுகிறார். 9ஆம் தேதி அதிகாலை 1.25 மணிக்கு சிங்கப்பூர் வந்து சேர்கிறார். பின்னர், அங்கு தங்கியிருக்கும் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 10ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் அன்றிரவு 10 மணிக்கு சென்னை திரும்புகிறார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.