நெமிலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் : மு.க.ஸ்டாலின் அனுமதி!
செவ்வாய், 22 ஜனவரி 2008 (14:42 IST)
காஞ்சிபுரம் மாவட்டம், நெமிலியில் அமைய உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜவஹர்லால் நேரு நகர்புற புணரமைப்பு திட்டத்தின் மாநில அளவிலான வழிகாட்டும் ஒருங்கிணைந்த மற்றும் கண்காணிப்புக்குழுவின் ஐந்தாவது கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
நகர்புற ஏழைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான வீட்டுவசதி, குடிநீர், துப்புரவு வசதி ஆகியவற்றை மேம்படுத்துதல், ஏழை மக்களுக்கு தேவையான குடியிருப்பு வசதி, அடிப்படை வசதிகள் மற்றும் குடிசை வசதிகளை புதியதாக ஏற்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்த முன்மொழியப்படும் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்க மாநில அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டினை தீர்ப்பதற்காக சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தின் மூலம் காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், நெம்மேலியில் ரூ.980.17 கோடியில் சவ்வூடு பரவல் முறையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அமைப்பதற்கு இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தினசரி 100 மில்லியன் லிட்டர் குடிநீர் கடல்நீரில் இருந்து தயாரித்து சென்னைக்கு வழங்கப்பட உள்ளது.
ஒருங்கிணைந்த வீட்டு வசதி மற்றும் குடிசைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வீட்டு வசதி, குடிநீர், துப்புரவு வசதி ஆகியவைகளை மேம்படுத்துதல், ஏழை மக்களுக்கு தேவையான குடியிருப்பு வசதி, அடிப்படை வசதிகள், குடிசை வசதிகளை ஏற்படுத்துவதற்காக சேலம், திருச்சி, திருநெல்வேலி மாநகராட்சிகளிலும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாமக்கல், கரூர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய நகராட்சிகளில் ரூ.114.15 கோடி செயல்படுத்துவதற்கு இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் குடிசை, வாரியத்துறை அமைச்சர் சுப.தங்கவேலன், நிதித்துறைச் செயலர் ஞானதேசிகன் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.