குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்து விசாரணை: சென்னையில் ஜன.23ல் நடக்கிறது!
செவ்வாய், 22 ஜனவரி 2008 (10:42 IST)
பள்ளிகள், விடுதிகளில் குழந்தைகள் மீது நடத்தப்படும் உடல் ரீதியான தண்டனை, அனைத்து விதமான சித்திரவதை, பாலியல் வன்முறை, புறக்கணிக்கப்படுவது குறித்த பொது மக்கள் விசாரணை வருகிற 23ஆம் தேதி, காலை 9.30 மணிக்கு சேத்துப்பட்டில் உள்ள உலக பல்கலைக் கழக சேவை மையத்தில் நடக்கிறது.
பள்ளிகள், விடுதிகளில் குழந்தைகள் மீது நடத்தப்படும் பலவித வன்முறைகள் குறித்து புது டெல்லி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திடம் அதிக அளவில் புகார்கள் பதிவாகியுள்ளன. இதன் அடிப்படையில் மக்களிடம் பொது விசாரணை நடத்த ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் பேசிய மாநில பெண்கள் ஆணைய முன்னாள் தலைவர் டாக்டர் வசந்திதேவி கூறியதாவது :
இந்த பொது விசாரணையில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பேராசிரியர் சாந்தா சின்கா, உறுப்பினர் தீபா தீக்ஷித் உள்படப் பலர் பங்கேற்க உள்ளனர். இதில் உடல் ரீதியான தண்டனை, சித்திரவதை, பாலியல் துன்புறுத்தல், ஜாதி பாகுபாடு, பள்ளி கூடங்களில் நன்கொடைக்காக கட்டாயப்படுத்துவது, தற்கொலை உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் விசாரணை நடக்கும். தன்னார்வ தொண்டு நிறுவன கூட்டமைப்பினர் 40 வழக்குகளை விசாரணைக்கு சமர்ப்பித்துள்ளனர். இது தொடர்புடைய அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பள்ளி கல்வி இயக்குனரகம் அளித்துள்ள தகவலில், கடந்த ஐந்தாண்டுகளில் பள்ளிகளில் 91 தற்கொலையும் 39 தற்கொலை முயற்சியும், 250 விபத்துக்களும், 19 பாலியல் தொந்தரவுகளும், 50 உடல் ரீதியான தொந்தரவுகளும் பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் மட்டும் நடந்துள்ளது. இதில் பாலியல் தொந்தரவு புகார்களின் எண்ணிக்கை நம்பத் தகுந்தவையாக இல்லை. இவ்வாறு டாக்டர் வசந்திதேவி கூறினார்.
தற்போது நடக்கவுள்ள பொது விசாரணையில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். விசாரணைக் குழுவில் முன்பு பாதிக்கப்பட்ட குழந்தைகள் வழக்கை கொண்டு வர விரும்புவர்கள் வழக்கு குறித்த விவரங்களை 22353503, 22351919, 22355905 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமும் [email protected], [email protected]என்ற மின்னஞ்சல் மூலமும் தெரிவிக்கலாம்.