கள்ளச்சந்தையில் சிமெண்டை விற்றால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை!
செவ்வாய், 22 ஜனவரி 2008 (10:05 IST)
''அரசின் சலுகை விலை சிமெண்ட் கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெயா எச்சரித்துள்ளார்.
இது குறித்து ஆட்சியர் ஆர்.ஜெயா செய்தியாளர்களிடம் கூறுகையில், சொந்தமாக வீடு கட்டும் ஏழைகளுக்கு அதிகபட்சமாக தலா 100 சிமெண்ட் மூட்டைகள் வரை சலுகை விலையில் (ஒரு மூட்டை ரூ.200) வழங்கப்படுகிறது. சென்னை மாவட்டத்தில் கோபாலபுரம், திருவான்மியூர், நந்தனம், விருகம்பாக்கம், தங்கசாலை ஆகிய 5 இடங்களில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் சிமெண்ட் விற்பனை செய்யப்படுகிறது.
வீடு கட்டும் இடம் 1,000 சதுர அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். சிமெண்ட் தேவைப்படுவோர் துணை தாசில்தாரிடம் அலுவலக நேரத்தில் இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து, அனுமதி பெற்ற கட்டட வரைபட நகல் (பிளான் அப்ரூவல்) இணைத்து அதே தலைமையிடத்து துணை தாசில்தாரிடம் அலுவலக நேரத்தில் ஒப்படைக்க வேண்டும்.
அரசின் சலுகை விலையில் சிமெண்ட் வாங்குபவர்கள், அதனை சொந்த வீடு கட்டுவதற்கு பயன்படுத்தாமல் கள்ளச்சந்தையில் விற்றாலோ, வேறு தேவைக்காக பயன்படுத்தினாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தாலுகா அலுவலகத்தில், சிமெண்ட் ஒதுக்கீட்டிற்கான ஆணை வழங்குவதற்காக லஞ்சம் பெற்றால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். எந்த அதிகாரியாவது லஞ்சம் கேட்டாலோ, சலுகை விலையில் சிமெண்ட் மூட்டைகள் பெறுவதில் சிரமம் ஏற்பட்டாலோ 25228025, 25268321, 25268322 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம். எழுத்துப்பூர்வமாகவும் புகார் கொடுக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஜெயா கூறினார்.