அடிப்படை அறிவியல், ஆராய்ச்சிப் படிப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதைக் கருத்தில் கொண்டு, புதிய திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கவலையுடன் வலியுறுத்தினார்.
புதுச்சேரியில் 34-வது ஜவஹர்லால் நேரு தேசிய அறிவியல் குழந்தைகள் கண்காட்சியை தொடங்கி வைத்து அவர் பேசுகையில், "பள்ளிக் கல்விக்குப் பிறகு அறிவியல் படிப்பை விரும்பிப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டது. 1950-களில் இப் படிப்பில் 32 விழுக்காடு மாணவர்கள் சேர்ந்த நிலை மாறி சமீப ஆண்டுகளில் 19.7 விழுக்காடாக குறைந்து விட்டது" என்றார்.
"1950-களில் அறிவியல் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் திறன் வாய்ந்த மாணவர்களாக இருந்தனர். இப்போது அறிவியல் படிப்பில் குறைந்த நடுத்தர திறமை வாய்ந்த மாணவர்கள்தான் சேர்ந்து வருகின்றனர். திறமை வாய்ந்த மாணவர்கள் அறிவியல் படிப்பை விட்டு விலகுவதைத்தான் இது காட்டுகிறது.
சமீப ஆண்டுகளில் தேசிய திறனறி தேர்வுகளில் வெற்றி பெற்று விருது பெற்ற 750 பேரில் 100 பேர் மட்டும் அறிவியல் மாணவர்களாக இருந்தனர். இதிலும் 15 முதல் 20 விழுக்காடு மாணவர்கள்தான் அறிவியல் பாடத்தில் முதுநிலைப் படிப்பைத் தொடந்துள்ளனர். சமூக, பொருளாதார நெருக்கடி காரணமாகவும், மாறிவரும் வேலைவாய்ப்பு நிலவரத்தைக் கருத்தில் கொண்டும் திறன்வாய்ந்த அதிக அளவிலான மாணவர்கள் தகவல் தொழில்நுட்பம், பயோ டெக்னாலஜி போன்ற படிப்புகளின் பக்கம்தான் சாய்கின்றனர்.
அடிப்படை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் பக்கம் மாணவர்களை ஈர்க்கும் வகையில் அரசுகள், கல்வி நிறுவனங்கள் சில திட்டங்களை வகுக்க வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சிறந்த கருவிகள் அடங்கிய பரிசோதனைக் கூடங்களை உருவாக்க வேண்டும். ஆராய்ச்சி நடவடிக்கைக்கு உதவித் தொகை மற்றும் நிதியுதவியை அதிகரிக்க வேண்டும். உலக அளவிலும், இந்தியாவிலும் மக்கள் தொகை பெருகிவிட்டது. இதைக் கருத்தில் கொண்டு வறுமை, பசி, ஊட்டச்சத்து குறைவு, படிப்பறிவின்மை போன்றவற்றில் விரைவாகக் கவனம் செலுத்தவில்லையென்றால் பெரும் பிரச்னை ஏற்படும். இதுபோன்ற சாவல்களை அறிவியல் அணுகுமுறையுடன் அணுக வேண்டும்.
விஞ்ஞானிகளும் குறைந்த செலவிலான, எளிதில் சாதாரண மக்களைச் சென்றடையும் வகையிலான தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும். விஞ்ஞானிகள் மக்களிடம் கலந்துரையாடி அவர்களுக்குத் தேவையான விடயங்களை அறிந்து தங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்" என்றார் குடியரசுத் தலைவர். இக்கண்காட்சி இம்மாதம் 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.