இந்து தெய்வங்களை அவமதித்ததாக நடிகை குஷ்பு மீது ராமேசுவரம் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நடிகர் பார்த்திபன் நடிக்கும் 'வல்லமை தாராயோ' என்ற புதிய திரைப்படத்திற்கான பூஜை கடந்த 22ஆம் தேதி சென்னையில் நடந்தபோது விழா போது மேடையில் முப்பெரும் தேவியரின் சிலைகளை அவமதிக்கும் வகையில் நடிகை குஷ்பு நடந்து கொண்டதாகவும், இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கும்பகோணம் நீதிமன்றத்தில் இந்து முன்னணி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் ராமேசுவரம் நகர இந்து முன்னணி தலைவர் கண்ணன், நகர செயலாளர் நாகரத்தினம் ஆகியோர் வழக்கறிஞர் ராமமூர்த்தி மூலம் ராமேசுவரம் நீதிமன்றத்தில் நேற்று ஒரு வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், சென்னையில் நடந்த "வல்லமை தாராயோ'' என்ற திரைப்படத்தின் துவக்க விழா நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு முப்பெரும் தேவியரின் சிலைகள், பூஜை பொருட்கள் ஆகியவற்றை அவமதிக்கும் வண்ணம் திருஉருவ விக்கிரகங்களுக்கு அருகில் நாற்காலியில் காலில் காலணியுடன் கால்மேல் கால் போட்டு அமர்ந்துள்ளார். இந்த புகைப்படமும் பத்திரிகைகளில் பிரசுரமாகி உள்ளது.
குஷ்புவின் இந்த செயல், இந்து மதத்தை பெரிதும் மதித்து போற்றும் மக்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. இந்து கடவுள்களின் திருஉருவ சிலைகள் பூஜிக்கப்படும் இடங்களில் ஆன்மிக சம்பிரதாயங்கள், வேதங்கள் அனுசரிக்கப்பட வேண்டும். முப்பெருந்தேவியர், இந்து மக்களின் குறிப்பாக தமிழ் மக்களால் போற்றி வணங்கப்படும் தெய்வங்களாகும்.
இந்து தெய்வங்களின் திருஉருவ சிலைகளையும், பூஜை பொருட்களையும் அவமானப்படுத்துவது இந்து சமுதாயத்தையே அவமானப்படுத்தும் செயலாகும். இந்த செயல்கள் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 295, 295 ஏ பிரிவின்படி குற்றச்செயலாகும். ஆகவே நீதிமன்றம் சம்மன் அனுப்பி, மனுதாரர் தரப்பு சாட்சிகளை விசாரித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த வழக்கை விசாரித்த ராமேசுவரம் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு சம்பத்குமார் இந்த மனு மீதான விசாரணையை டிசம்பர் 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.