சென்னை‌யி‌லிருந்து 442 பே‌ர்‌ 'ஹஜ்' பயண‌ம்: அமைச்சர் வழியனுப்பினார்!

Webdunia

சனி, 1 டிசம்பர் 2007 (10:43 IST)
சென்னையில் இருந்து 442 `ஹஜ்' பயணிகளுடன் முதல் விமானம் நே‌ற்று புறப்பட்டுச் சென்றது. அமைச்சர் மைதீன்கான் அவர்களை வழியனுப்பி வைத்தார்.

இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்று `ஹஜ்' புனிதப் பயணம் ஆகும். இந்த யாத்திரைக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி 3 ஆயிரத்து 812 பேரை தேர்வு செய்து உள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து செல்பவர்கள் 1703 ஆண்கள், 1848 பெண்கள், 11 குழந்தைகள் ஆக மொத்தம் 3,562 பேர். புதுச்சேரியில் இருந்து 175 பேரும், அந்தமான் தீவுகளில் இருந்து 75 பேரும் செல்கிறார்கள்.

மொத்தம் தேர்வான 3,812 பேரில், 442 `ஹஜ்' பயணிகளைக் கொண்ட முதல் விமானம் நேற்று மாலை சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றது. அவர்களில் 207 பேர் ஆண்கள், 235 பேர் பெண்கள். இவர்களை தமிழக அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் வழியனுப்பி வைத்தார். தமிழக ஹஜ் ஆணைய‌த் தலைவர் ஜெ.எம்.ஆரூண் எம்.பி, தமிழக ஹஜ் வாரியத் தலைவர் ஹைதர் அலி, துணைத் தலைவர் பிரசிடென்ட் அபுபக்கர், அரசு செயலாளர் அலாவுதீன், சிறுபான்மை துறை அரசு செயலாளர் வாசுதேவன், தலைமை ஹாஜி சலாவுதீன் அயூப், அகமது அலி, கலில் ரகுமான், அக்தர் உசேன் உள்பட பலரும் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.

பின்னர் அமைச்சர் மைதீன்கான் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், ஹஜ் பயணிகள் செல்ல தமிழக அரசு தகுந்த ஏற்பாடுகளை செய்து வருகிறது. வருகிற 5ஆ‌ம் தேதி புனித ஹஜ் யாத்திரைக்கு 2 விமானங்கள் செல்கின்றன. மொத்தம் 9 விமானங்களில் ஹஜ் பயணிகள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ஜனவரி 11ஆ‌ம் தேதியில் இருந்து 16ஆ‌ம் தேதி வரை ஹஜ் யாத்திரை முடித்தவர்கள் தனி விமானங்களில் திருப்பி அழைத்து வரப்படுவார்கள் எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்