மருத்துவ (எம்.பி.பி.எஸ்.) படிப்பினை ஆறரை ஆண்டுகளாக உயர்த்துவதை கண்டித்து சென்னையில் மருத்துவ கல்லூரி மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் இன்று முதல் வகுப்புகளை புறக்கணித்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
மருத்துவ படிப்பினை ஐந்தரை ஆண்டிலிருந்து ஆறரை ஆண்டுகளாக உயர்த்துவதை கண்டித்து மருத்துவ கல்லூரி மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் சார்பில் சென்னை மெமோரியல் ஹால் முன்பு நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் கூட்டமைப்பின் செய்திதொடர்பாளர் சதீஷ் பேசுகையில், மருத்துவ படிப்பு காலத்தை ஐந்தரை ஆண்டில் இருந்து ஆறரை ஆண்டுகளாக மாற்ற கூடாது. மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கைவிட வேண்டும். முதலமைச்சர் கருணாநிதி தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும்.
மருத்துவ படிப்பு காலத்தை ஆறரை ஆண்டுகளாக உயர்த்துவதை கண்டித்து நாளை (இன்று) முதல் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் வகுப்புகளை புறக்கணித்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபடுவார்கள் என்று தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் கூட்டமைப்பின் செய்திதொடர்பாளர் சதீஷ் கூறினார்.