கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 6 பேருக்கு இன்று இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது தவிர மேலும் 18 பேருக்கு 7 ஆண்டு முதல் 21 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் செய்ய பா.ஜ.க. தலைவர் அத்வானி வந்தபோது 11 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் 58 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல்நாசர் மதானி, தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத் தலைவர் பாஷா, பொதுச் செயலாளர் முகமது அன்சாரி உள்பட 168 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
விசாரணை காலத்தில் ஒருவர் இறந்துபோக, இன்னொருவர் அப்ரூவராக 166 பேர் மீது விசாரணை நடத்தி, மதானி உட்பட 8 பேர் அதில் விடுதலை செய்யப்பட்டனர். 158 பேர் குற்றவாளிகள் என தனி நீதிமன்ற நீதிபதி உத்ராபதி தீர்ப்பளித்தார். அவர்களுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.
அதில், 88 பேருக்கு 5 முதல் 9 ஆண்டு வரை சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. அவர்களது தண்டனை காலம் முடிவடைந்ததை அடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். கூட்டுச்சதி, கொலை முயற்சி, கொலை போன்ற கடும் குற்றச் சாட்டுகள் நிரூபணமான 70 பேருக்கு தண்டனை நேற்று தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று 35 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. இதில் பாஷாவுக்கு ஆயுள் தண்டைனயும், 3 ஆண்டு சிறை தண்டனையும், அன்சாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 75 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. மேலும் சித்திக் அலி, ஓசிர் உள்ளிட்ட 29 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதில் 4 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது.
எஞ்சிய 35 பேரில் 10 பேருக்கான தண்டனையை நீதிபதி உத்ராபதி இன்று அறிவித்தார். அதில் மோனப்பா, அப்துல் ரசாக்,முகமது அஸ்லாம், ரியாஸ் அகமது, சந்த் முகமது உள்பட 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அஸ்ரப், அபுதாகீர், முகமது ரபீக், அப்பாஸ், அப்துல் ராவூப் உள்பட 18 பேருக்கு 7 ஆண்டுகள் முதல் 21 ஆண்டு வரை கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மற்றவர்களுக்கு தண்டனைகள் தொடர்ந்து அறிவிக்கப்படும் என தெரிகிறது.