நெய்வேலியில் மறியல்: சுப்புராயன் எம்.பி. உள்பட 3000 பேர் கைது!
Webdunia
புதன், 12 செப்டம்பர் 2007 (19:02 IST)
ஊதிய உயர்வு நிலுவை, போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்.எல்.சி.) நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் நடத்தி வரும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று மறியல் நடந்தது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புராயன் உள்பட 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் ஊதிய உயர்வு நிலுவை, போனஸ் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று 5வது நாள் போராட்டம் நடந்தது. என்.எல்.சி. 2வது சுரங்க நுழைவு வாயில் முன் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். இதற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. ஆனால் அதையும் மீறி போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனம் நிறுத்தப்பட்டது.
காலை 10.40 மணிக்கு சுப்புராயன் எம்.பி. தலைமையில் தொழிலாளர்கள் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் சுரங்கம் முன் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை காவல் துறையினர் தடுத்தனர். அப்போது காவலர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, சுப்புராயன் எம்.பி. உள்பட 3 ஆயிரம் பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மறியல் காரணமாக நெய்வேலி, விருத்தாசலம், கடலூர் மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.