யாழ்ப்பாணம் தமிழர்களுக்காக திரட்டப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்களை படகுகள் மூலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்ல நெடுமாறன் உள்ளிட்ட ஈழத் தமிழர் விடுதலை ஆதரவு அமைப்பினர் இன்று முயற்சித்தனர். ஆனால் அங்கிருந்த படகு உரிமையாளர்கள எவரும் அதற்கு சம்மதிக்காததால் போராட்டத்தை கைவிடுவதாக நெடுமாறன் அறிவித்தார்.
இலங்கை யாழ்ப்பாணத்தில் தவிக்கும் தமிழர்களுக்காக பொருட்கள் திரட்டி கொண்டு செல்லும் முயற்சியை தி.மு.க. தலைவர் கருணாநிதி சாதுர்யமாக முறியடித்துள்ளார். இங்குள்ள படகு உரிமையாளர்கள் மற்றும் படகு தொழிலாளர்களை ஒருங்கிணைப்பு குழுவுக்கு படகு கொடுக்க கூடாது என்று மிரட்டப்பட்டு உள்ளனர். அப்படி கொடுத்தால் படகுகள் பறிமுதல் செய்வோம் என்றும் மிரட்டப்பட்டு உள்ளனர். எனவே படகு பயணம் ரத்து செய்யப்படுகிறது என்று நெடுமாறன் தெரிவித்தார்.
இந்த நிலையில், "யாழ். மக்களுக்காக நாங்கள் திரட்டியிருக்கக் கூடிய இந்த உணவு மற்றும் மருந்துப் பொருட்களை யாழ்ப்பாண மக்களுக்கு அனுப்ப இந்திய செஞ்சிலுவைச் சங்கத்துக்கு இந்திய அரசாங்கம் அனுமதி அளிக்கும் வரையில் "சாகும் வரை உண்ணாவிரதம்" இருப்பதாக முடிவு செய்துள்ளேன்" என்று நெடுமாறன் அறிவித்தார்.
சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் தான் மட்டுமே ஈடுபடப் போவதாகவும் இன்று ஒரு நாள் மட்டும் மற்ற தோழர்களும் உண்ணாவிரத்தில் ஈடுபடலாம் என்று கேட்டுக் கொண்ட நெடுமாறன், தனக்கு ஏதேனும் நேர்ந்தால் போராட்டக் குழுவினர் தேர்வு செய்யும் ஒருவர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இப்பிரச்சனையில், தங்களுடைய போராட்டத்தை எல்லா விதத்திலும் கொச்சைப் படுத்துவதிலேயே தமிழக அரசு முனைப்பு காட்டியதாக குற்றம் சாற்றிய நெடுமாறன், யாழ் மக்களுக்கு உணவும், மருந்துப் பொருட்களையும் அனுப்புவதில் தமிழக அரசு அக்கரை காட்டியிருந்தால் இப்பிரச்சனை ஏற்பட்டிருக்காது என்று கூறினார்.