பக்கிங்காம் கால்வாய், கூவம் பகுதிகளை தூர்வார ரூ.250 கோடி ஒதுக்கீடு: முதல்வர்!
Webdunia
புதன், 12 செப்டம்பர் 2007 (11:48 IST)
பக்கிங்காம் கால்வாய், கூவம் பகுதிகளை தூர்வார ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்ற ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் சென்னை நகரின் கடலோரப் பகுதிகளில் ஏற்படக்கூடிய பெருமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து சேதம் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு பருவமழைக்கு முன்னரும், பருவமழையின் போதும் பொதுப்பணித்துறையின் கீழ் பராமரிப்பில் உள்ள நீர் வழித்தடங்களில் தூர்வாரி, மணல் திட்டுகள் அகற்றி 12 பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.250 கோடியே 76 லட்சத்திற்கு முதல் அமைச்சரின் உத்தரவின் பேரில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தூர்வாரப்படும் இடங்களான, ஓட்டேரி நல்லவாவைச் சீரமைத்தல், விருகம்பாகக்ம் அரும்பாக்கம் கால்வாயை சீரமைத்தல், அம்பத்தூர் ஏரியின் மிகைநீர் வழிந்தோடியில் தூர் வாரி தடங்கல்களையும் அகற்றுதல். வடக்கு பக்கிங்காம் கால்வாயில் கொட்டப்பட்ட குப்பை கூளங்கள், செடிகொடிகளை அகற்றி, தூர்வாரி தடங்கல்களை அகற்றுதல். மத்திய பக்கிங்காம் கால்வாயில் கொட்டப்பட்ட குப்பை கூளங்களை அகற்றி தூர்வாரி தடங்கல்களை அகற்றுதல்.
தெற்கு பக்கிங்காம் கால்வாயில் கொட்டப்பட்டுள்ள குப்பை கூளங்களை அகற்றி தூர்வாரி தடங்கல்களை அகற்றுதல். கொடுங்கையூர் கால்வாயில் தூர்வாரி தடங்கல்களை அகற்றுதல். போரூர் ஏரியின் மிகைநீர் வழிந்தோடியில் தூர்வாரி தடங்கல்களை அகற்றுதல். வீராங்கல் ஓடையினை பறக்கும் ரயில் திட்ட எல்லையில் இருந்து ஐந்துகண் பாலம் வரை தூர்வாரி தடங்கல்களை அகற்றுதல்.
வீராங்கல் ஓடையினை ஆலந்தூர் நகராட்சி எல்லையில் இருந்து பறக்கும் ரயில் திட்ட எல்லை வரை தூர்வாரி தடங்கல்களை அகற்றுதல். பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி முதல் ஒக்கியம் மடுவு வரை குப்பை கூளங்கள் மற்றும் செடி கொடிகளை அகற்றி தூர்வாரி தடங்கல்களை அகற்றுதல். வேளச்சேரி கால்வாயில் கொட்டப்பட்ட குப்பை கூளங்கள், செடிகொடிகளை, அகற்றி தூர்வாரி தடங்கல்களை அகற்றுதல்.