காங்கிரசார் பதுங்கி இருக்கிறார்கள்: இளங்கோவன்!
Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2007 (15:08 IST)
காங்கிரசார் அடங்கி இருக்கவில்லை. பதுங்கி இருக்கிறார்கள் என்று திருச்சியில் நடந்த கூட்டத்தில் மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
தமிழ்நாட்டில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பீகார், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் கடந்த 30 ஆண்டுகளாக வளர்ச்சியில் பின்தங்கியே உள்ளன. தமிழகத்தில் ஆரம்பத்தில் இருந்தே பங்கு வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். ஏன் மனம் வரவில்லை என்று தெரியவில்லை. இப்போது பதவியில் இல்லாததே நல்லது என்று தோன்றுகிறது என்று இளங்கோவன் குறிப்பிட்டார்.
காங்கிரசுக்கு மக்கள் தரும் ஆதரவை தமிழக காங்கிரசார் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நாம் அடங்கி இருக்கவில்லை. பதுங்கி இருக்கிறோம். தூங்கிக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்க வேண்டாம். எழுந்து விட்டோம், எழுந்து கொண்டிருக்கிறோம் என்று மத்திய அமைச்சர் கூறினார்.
இன்றைக்கு கேலிபேசிய பணக்கார நாடுகள் 10 ஆண்டுகளில் இந்தியா பெரிய நாடாகும் என்கிறார்கள். பெரிய அளவில் பொருளாதாரத்தை திறந்து விட்டனர் பிதமர் மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும். இன்னும் வளர வேண்டும். எல்லாவற்றுக்கும் சக்தி வேண்டும் என்பதற்காகத்தான், அணுசக்தி ஒப்பந்தம் போடப்படுகிறது. இந்த ஒப்பந்தம் காங்கிரஸ் கொண்டு வந்ததல்ல. பா.ஜ.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. கொஞ்சம் நாகரீகம் கொண்ட வாஜ்பாய் ஆதரிக்கிறார். நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் எதிர்க்கிறார்கள். எரிபொருள் ஆதிகம் கிடைத்தால் நாட்டில் தொழில் வளம் பெருகி இந்தியா வல்லரசாகும். நல்லவை கிடைக்கும் என்று தெரிந்தும் எதிர்க்கிறார்கள் என இளங்கோவன் தெரிவித்தார்.