கனிமொழிக்கு சலுகை காட்டுவது ஏன்? பெஹூரா கேள்வி

செவ்வாய், 1 நவம்பர் 2011 (18:09 IST)
கனிமொழி உள்ளிட்ட சிலர் பிணைய விடுதலை பெறுவதை எதிர்க்காமல், மற்றவர்களுடைய பிணைய விடுதலையை எதிர்ப்பதன் மூலம் அரசியல் பார்வையுடன் மத்திய புலனாய்வுக் கழகம் செயல்படுவது தெளிவாகியுள்ளது என்று 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் குற்றஞ்சாற்றப்பட்டுள்ள தொலைத் தொடர்பு முன்னாள் செயலர் சித்தார்த் பெஹூரா குற்றஞ்சாற்றியுள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கை விசாரித்துவரும் டெல்லி ம.பு.க. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் இன்று நடந்த விசாரணையின்போது, பெஹூரா சார்பில் வாதிட்ட மூத்த வழக்குரைஞர் அமன் லேக்கி, “குற்றஞ்சாற்றப்பட்டவர்களுக்கு இடையே பாரபட்சம் காட்டுகிறது மத்திய புலனாய்வுக் கழகம். இதன் மூலம் இந்த வழக்கில் அரசியல் தலையீடு உள்ளது என்பதை காட்டுகிறது” என்று கூறினார்.

கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி தலைமை நிர்வாக அதிகாரி சரத் குமார், திரைப்படத் தயாரிப்பாளர் கரீம் மொராணி, குசேகான் பழ நிறுவன இயக்குனர் அசி்ப் பல்வா, இராஜீவ் அகர்வால் ஆகியோருடன் பிணைய விடுதலை கேட்டு பெஹூராவும் பிணைய விடுதலை கோரி மனுச் செய்துள்ளார்.

இந்த குற்றச்சாற்றிற்குப் பதிலளித்த ம.பு.க. வழக்குரைஞர் யு.யு.லலித், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.இராசா, ஸ்வான் டெலகாம் நிறுவனர் ஷாஷித் பல்வா, இராசாவின் தனிச் செயலர் ஆர்.கே.சண்டோலியா ஆகியோரின் பிணைய விடுதலை மனுக்களை எதிர்ப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

இதனை எதிர்த்த வழக்குரைஞர் லேகி, குற்றஞ்சாற்றப்பட்ட அனைவரையும் சமமாகவே பாவிக்க வேண்டும். அவ்வாறில்லாமல் கனிமொழி உள்ளிட்ட 5 பேருக்கு மட்டும் சலுகை காட்டுவது சரியில்லை. எந்த அடிப்படையில் அவர்களுக்கு பிணைய விடுதலை அளிப்பதை எதிர்க்கவில்லை என்பதை ம.பு.க.விளக்க வேண்டும். இதனை மிகச் சரியாகவே உச்ச நீதிமன்றம் வினவியுள்ளது என்று வாதிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்