மத்திய அமைச்சரவையில் மாற்றம்: பிரதமர் முடிவு

செவ்வாய், 6 ஜூலை 2010 (15:38 IST)
மத்திய அமைச்சரவையை விரைவில் மாற்றியமைக்க பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளதாகவும், தொலை தொடர்புதுறை அமைச்சர் ராசா அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ராம் விலாஸ் பஸ்வான் மற்று அஜித் சிங் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்படலாம் என்றும், ஷரத் பவாரின் இலாகாக்கள் குறைக்கப்படலாம் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அமைச்சர் ஷரத் பவார் வேளாண், உணவு, நுகர்வோர் மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக உள்ளார்.

இந்நிலையில் ஷரத் பவார் கடந்த வாரம் சர்வதேச கிரிக்கெட் வாரிய (ஐசிசி) தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதனால் தமது பணிச் சுமை அதிகரித்துள்ளதாகவும், எனவே தாம் வகிக்கும் அமைச்சர் பதவிக்கான இலாக்களை குறைக்குமாறு பிரதமரிடம் நேற்று கேட்டுக்கொண்டார்.

அதே சமயம் அமைச்சர் பதவியை இழக்க அவர் தயாராக இல்லை என்றும், வேளாண்துறை இலாகாவை மட்டும் வைத்துக்கொள்ள விரும்புவதாகவும் அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் ஷரத் பவாரின் இந்த கோரிக்கையைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்ய பிரதமர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அமைச்சரவை மாற்றத்தின்போது ஷரத் பவாரின் இலாகாக்களை குறைப்பதோடு மட்டுமல்லாது பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்திற்கு அமைச்சரவையில் கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அஜித் சிங் மற்றும் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோரை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள மன்மோகன் தீர்மானித்துள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் ஒரு முக்கிய மாற்றமாக, சர்ச்சைக்குள்ளான தொலை தொடர்புதுறை அமைச்சர் அ. ராசாவை அமைச்சரவையிலிருந்து நீக்கவும் பிரதமர் முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாகத்தான் அண்மையில் சென்னை சென்ற மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசியதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே மேற்கூறிய மாற்றங்கள் மற்றும் முடிவுகள் காரணமாகவே மத்திய அமைச்சரவையை வருகிற 10 முதல் 15 ஆம் தேதிக்குள் மாற்றியமைக்க பிரதமர் மன்மோகன் தீர்மானித்துள்ளதாக அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்