நிலம் கையகப்படுத்துவதில் மாநில முதல்வர்கள் உதவ வேண்டும்: கமல்நாத்
சனி, 11 ஜூலை 2009 (13:30 IST)
சாலைப் பணிகளை மேற்கொள்வதற்கு நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மாநில முதல்வர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் கமல்நாத் வலியுறுத்தியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற சாலை கட்டுமான வசதி தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கு நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சாலைப் பணிகளை மேற்கொள்வதில் நிலங்களை கையகப்படுத்துவதில் உள்ள நடைமுறைகள் பெரும் தடையாக உள்ளது. இதற்கு அதிக அளவில் செலவும் ஏற்படுகிறது.
நிலங்களை கையகப்படுத்துவதில் பிரச்னை தொடர்ந்தால் அந்த திட்டங்கள் கைவிடப்படும். 80 சதவீத அளவிற்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் மட்டுமே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டத்திற்கான ஒப்பந்தபுள்ளிகளை கோரும். 9 சதவீத வளர்ச்சியை எட்டுவதற்கு சாலை கட்டுமான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டியது மிகவும் முக்கியமாகும்.
நாள் ஒன்றுக்கு 20 கி.மீ. தொலைவிற்கு சாலைகளை அமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டில் 12 ஆயிரம் கி.மீ. தொலைவிற்கு சாலைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ரூ.1 லட்சம் கோடி முதலீடு தேவைப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.