பக்ளிஹார் அணை பிரச்சனை: இந்தியா, பாகிஸ்தான் பேச்சு துவக்கம்!
வியாழன், 23 அக்டோபர் 2008 (12:54 IST)
சீனாப் நதியின் குறுக்கே பக்ளிஹார் அணை கட்டியது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே எழுந்துள்ள பிரச்சனைக்குத் தீர்வு காண இந்திய, பாகிஸ்தான் நீர் வள ஆணைய அதிகாரிகளுக்கு இடையே டெல்லியில் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.
சிந்து நதியின் கிளை நதியான சீனாப் நதியின் குறுக்கே இந்தியா கட்டியுள்ள பக்ளிஹார் நீர் மின் நிலையத்திற்கான அணையால் தங்களுக்கு வரவேண்டிய நீர் அளவு குறைந்துவிட்டது என்று பாகிஸ்தான் குற்றம் சாற்றியதைத் தொடர்ந்து எழுந்த பிரச்சனைக்கு தீர்வு காண இந்தப் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.
பக்ளிஹார் அணை கட்டியதால் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திற்கு பாசன நீர் ஆதாரமாகவுள்ள சீனாப் நதியில் நீர்வரத்து குறைந்துவிட்டது என்றும், இதனால் விவசாய உற்பத்தி குறைந்துவிட்டதாகவும் பாகிஸ்தான் குற்றம்சாற்றியுள்ளது.
இதனை மறுத்துள்ள இந்தியா, பக்ளிஹார் அணை கட்டியதால் நீர் வரத்து குறையவில்லை என்றும், இந்த ஆண்டு பருவ மழை குறைவாக பெய்ததால்தான் சீனாப் நதியில் நீர்வரத்து குறைந்ததற்கு உண்மையான காரணமென்றும் இந்தியா கூறியுள்ளது.
இந்த நிலையில், இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் நீர் வள ஆணையத்தின் தலைவர் சையது ஜமாத் அலி ஷா தலைமையிலான குழு நேற்று பக்ளிஹார் அணைக்குச் சென்று பார்வையிட்டது.
இந்த நிலையில், இன்று காலை இந்திய நீர் வள ஆணையத்தின் தலைவர் ஜி. ரங்கநாதன் தலைமையிலான குழுவுடன், சையது அலி ஷா தலைமையிலான பாகிஸ்தான் குழு பேச்சுவார்த்தையைத் துவக்கியுள்ளது.
இப்பிரச்சனை தொடர்பாக இந்தியா மீது பாகிஸ்தான் தெரிவித்த குற்றச்சாற்றையடுத்து உலக வங்கியின் நிபுணர் லாஃபிட்டி பக்ளிஹார் அணையை ஆய்வு செய்து, அணைக் கட்டுமானத்தில் எந்த அத்துமீறலும் இல்லை என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் பக்ளிஹார் அணையின் முதல் மின் நிலையத்தை நாட்டிற்கு பிரதமர் மன்மோகன் சிங் அர்ப்பணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.