2015-க்குள் இந்தியரை நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டம்!

வியாழன், 23 அக்டோபர் 2008 (04:38 IST)
சந்திராயன்-1 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதைத் தொடர்ந்து வரும் 2015ஆம் ஆண்டுக்குள் இந்தியரை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.

சந்திராயான்-1 நேற்று வெற்றிகரமான செலுத்தப்பட்ட பின்பு சத்தீஷ் தவான் விண்வெளி மையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மாதவன் நாயர் பேசுகையில், சந்திராயன்-1 ஆளில்லா விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதால் அடுத்தகட்ட செயல்பாடுகளை நிதானமாக மேற்கொள்ள போதிய அவகாசம் கிடைத்துள்ளது.

ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் 2 இந்திய விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான விண்கலத்தை வடிவமைப்பது குறித்தும் ஆராய உள்ளோம். நிலவுக்கு மனிதனை அனுப்புவது மிகவும் சவால் நிறைந்த பணியாகும்.

தொழில்நுட்பம் மற்றும் நடைமுறையில் இது மிகப் பெரிய சவால் என்று குறிப்பிட்ட மாதவன் நாயர் இதற்காக விண்வெளி வீரர்களை தேர்வு செய்து பயிற்சி அளிப்பதும், அவர்களை விண்ணுக்கு அனுப்புவதும் சவாலானதுதான் என்றார்.

இவை அனைத்தையும் ஆராய்ந்த பின்னர், இஸ்ரோ சமர்ப்பித்த நிலவுக்கு இந்தியரை அனுப்பும் திட்டத்திற்கு விண்வெளிக் கழகம் அனுமதி வழங்கியதாக கூறிய அவர், மத்திய அரசின் ஒப்புதலுக்காக இத்திட்டம் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வு பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, நிலவுக்கு இந்தியரை அனுப்பிய பின்னர், செவ்வாய் கிரகம் பற்றிய ஆய்வும், அங்கு மனிதனை அனுப்புவதும் இஸ்ரோவின் அடுத்த முயற்சியாக இருக்கும் என்று பதிலளித்த மாதவன் நாயர், இதற்கான் தொழில்நுட்ப திறன் மற்றும் திட்டப் பணிகள் துவக்கப்பட்டு விட்டதாக கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்