சி.ஐ.ஏ.வுடன் உளவுத் தகவல்கள் பகிர்வதை நிறுத்தியது ஐ.எஸ்.ஐ
ஞாயிறு, 15 மே 2011 (13:06 IST)
அமெரிக்கா தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்து அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை கொன்றதைத் தொடர்ந்து அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வுடன் உளவுத் தகவல்களை பகிர்ந்துகொள்வதை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ நிறுத்திவிட்டது.
பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்த தாங்கள் உதவியதாகவும், சி.ஐ.ஏ.வுக்கு தகவல்கள் அளித்ததாகவும் முன்பு கூறிவந்த ஐ.எஸ்.ஐ முகவர்கள், இப்போது பயங்கரவாதிகள் குறித்து சி.ஐ.ஏ.வுக்கு தகவல்கள் அளிக்க மறுத்துவருவதாக சண்டே டெலிகிராப் தெரிவித்துள்ளது.
அபோட்டாபாதில் மே 2ஆம் தேதி அமெரிக்கப் படையினர் தாக்குதல் நடத்தி பின்லேடனைக் கொன்றனர். இந்த நடவடிக்கை குறித்து பாகிஸ்தானிடம் முன்கூட்டியே தகவல் அளிக்கவில்லை என அமெரிக்கா குறிப்பிட்டிருந்தது.
இதனால் கடும்கோபத்தில் உள்ள ஐ.எஸ்.ஐ, சி.ஐ.ஏ.வுடன் உள்ள உறவை துண்டித்துவிட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.