இந்தோனேஷியாவின் ஜாவா தீவுப் பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆகப் பதிவானதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய நேரப்படி இன்று மதியம் 1.25 மணியளவில் ஜாவா தீவின் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 50 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு ஜாவா மாகாணத்தைச் சேர்ந்த 7 பேர் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்ததாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை மையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தின் தாக்கம் கடுமையாக இருந்ததால் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. எனினும் ஒரு மணி நேரத்திற்குப் அது திரும்பப் பெறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.