சர்க்கரை, உரம் மீதான கட்டுப்பாடுகள் தளர்வு: சிதம்பரம்!
வியாழன், 28 பிப்ரவரி 2008 (17:14 IST)
சர்க்கரை, உரம் மற்றும் மருந்துப் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
மக்களவையில் இன்று 2007- 08 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் சிதம்பரம், பதினொராவது திட்டக் காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9 விழுக்காடாக இருக்கும் என்று தான் உறுதியாக நம்புவதாகவும், இந்த வளர்ச்சி விகிதம் சாதாரண மக்களின் ஒட்டுமொத்த நலன்களை பாதுகாக்கும் வகையில் அமையும் என்றும் கூறினார்.
தனிமனித நுகர்வுத் திறன், பொதுப் பயன்பாட்டு பொருட்களின் விநியோகம் உள்ளிட்ட சாதாரண மக்களின் ஒட்டுமொத்த நலன்களைப் பேணும் வகையில் அரசின் ஆதாரங்களையும், திறனையும் பயன்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சர்க்கரை, உரம் மற்றும் மருந்து பொருட்கள் உள்ளிட்ட துறைகள் மீதான அரசின் கட்டுப்பாட்டை தளர்த்துவது, நிலக்கரி சுரங்க பணிகளில் தனியாரை அனுமதிப்பது, தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் நேரடி அன்னிய முதலீட்டை 49 விழுக்காடு அளவுக்கு உயர்த்துவது, கிரின்ஃபீல்டு கிராமப்புற வேளாண் வங்கிகளுக்கான நேரடி அன்னிய முதலீட்டு அளவை 100 விழுக்காடு அனுமதிப்பது, மாநகரங்கள், பெரிய நகரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பொது போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்த தனியார் நிறுவனங்கள் மூலம் செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளும் மத்திய அரசின் திட்டத்தில் பெற்றுள்ளது என்றார் சிதம்பரம்.