நாட்டின் தங்கம், வைரம் இறக்குமதி ரூ.1,40,000 கோடி!
வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (19:18 IST)
ஒரு சில மாதங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள புதிய சுரங்க கொள்கையின் மூலம் நாட்டின் சுரங்கத் துறை மிகப்பெரிய உந்து சக்தியைப் பெறும் என்று மத்திய சுரங்கத் துறை இணையமைச்சர் சுப்பராமி ரெட்டி தெரிவித்துள்ளார்.
மும்பையில் "அலுமினியம் இந்தியா - 2008 " கண்காட்சியை இன்று மத்திய சுரங்கத் துறை இணையமைச்சர் சுப்பராமி ரெட்டி தொடங்கி வைத்தார். இக்கண்காட்சியில் நால்கோ, ஹிண்டல்கோ, பால்கோ, வேடநந்தா ரிசோர்சஸ் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களும், 21 நாடுகளைச சேர்ந்த 124 நிறுவனங்களும் கண்காட்சியில் அரங்குகள் அமைத்துள்ளன.
கண்காட்சியை தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர், புதிய சுரங்கப் பணிகளை மேற்கொள்ளும் போது சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையிலும், அப்பகுதியில் உள்ள பழங்குடியினர் வாழ்க்கைத் தரம் மேம்படும் வகையிலும் செயல்பட நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த திட்டத்தைப் பொறுத்தமட்டில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்றும், பழங்குடியினரின் வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டும் என்று இடதுசாரிகள் விரும்புகின்றனர். இதனைத்தான் அரசும் செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதிய சுரங்கக் கொள்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் முன்னதாக மாநில அரசுகளுடனும், தொழில் கூட்டமைப்புகளுடனும் மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டு வருவதால்தான் சிறிது காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக சுப்பராமி ரெட்டி தெரிவித்துள்ளார். தங்கம், வைரத்தை பூமியில் இருந்து தோண்டியெடுக்கும் பணிக்கு மிக அதிக அளவில் முதலீடு தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தங்க உற்பத்தி 80 கோடி டன்களாக உள்ள நிலையிலும், இந்தியா ரூ1,40,000 கோடிக்கு தங்கம், வைரத்தை இறக்குமதி செய்து வரும் நிலை உள்ளதாகவும், அதிக அளவில் தங்கம் மற்றும் வைரத்தை நம்மால் உற்பத்தி செய்ய முடியும் நிலை இருந்தாலும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அன்னிய நேரடி முதலீடு இன்றியமையாததாக உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
தற்போது நம் நாடு 12 லட்சம் டன்கள் அலுமினியம் உற்பத்தி செய்து வருவதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் இது 50 லட்சம் டன்களாக அதிகரிக்கும் என்றும், தொழில் அதிபர்கள் இதனை ஒரு கோடி டன்களாக உயர்த்த பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய சுரங்க கொள்கையால் மாநில அரசுகளுக்கு அதிக ராயல்டி தொகை கிடைக்கும் என்று தெரிவித்த அவர், உதாரணமாக ஒரிஸ்ஸா மாநில அரசுக்கு தற்போது 1,000 கோடி ரூபாய் கிடைக்கிறது. புதிய சுரங்க கொள்கை நடைமுறைக்கு வந்தபின்னர் ரூ.3,000 கோடி கிடைக்கும் என்று சுப்பராமி ரெட்டி தெரிவித்துள்ளார்.
உலகின் அலுமினியம் உற்பத்தியில் இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளதாகவும், நடப்பாண்டின் அலுமினியத்தின் தேவை 14 விழுக்காடாக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.