வாகன உதிரி பாகங்கள் இறக்குமதி வரி குறைப்பதற்கு எதிர்ப்பு!

புதன், 19 டிசம்பர் 2007 (14:09 IST)
அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரிபாகங்களின் இறக்குமதி வரியை குறைக்க கூடாது என்று வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியாளர் சங்கம் கூறியுள்ளது.

மத்திய அரசு அடுத்த ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தயாரிக்கும் பணியை தொடங்க உள்ளது. இந்த நிதி நிலை அறிகையில் இடம் பெற வேண்டிய சலுகைகள், கருத்துக்களை பற்றி பல்வேறு தரப்பினரும் தங்களின் கருத்துக்களை மத்திய அரசுக்கு குறிப்பாக நிதி அமைச்சகத்துக்கு தெரிவித்து வருகின்றனர்.

வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியாளர் சங்கம் மத்திய அரசிடம் கொடுத்துள்ள நிதி நிலை அறிக்கைக்கான ஆலோசனையில், அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க கூடாது என கேட்டுக் கொண்டுள்ளது. அதில் மேலும் கூறியுள்ளதாவது:

சென்ற வருட நிதி நிலை அறிக்கையில் வாகன உதிரி பாகங்களுக்கான உதிரி பாகங்களுக்கு இறக்குமதி வரி 10 விழுக்காடாக குறைக்கப்பட்டது. இது மேலும் 7.5 விழுக்காடாக குறைக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் உதிரி பாகங்களின் அளவை விட, இறக்குமதி செய்வது அதிகமாக இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் இறக்குமதி வரியை மேலும் குறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

சர்வதேச அளவில் உள்ள நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து, உள்நாட்டு நிறுவனங்கள் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள வரி விலக்கு கணக்கீட்டை அதிகரிக்க வேண்டும். இந்த துறைக்கு தொழில் நுட்ப மேம்பாட்டு நிதியாக மத்திய அரசு ரூ.1000 கோடி ஒதுக்க வேண்டும்.

இந்திய வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், மற்ற நாட்டு நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க வேண்டும். இதற்கு வசதியாக நிறுவன வருமான வரியில் இருந்து எட்டு ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும். உதிரி பாகங்கள் தயாரிக்க அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் மூலப் பொருட்களுக்கும், இயந்திரங்களுக்கும் இறக்குமதி வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்