சென்னிமலை துணி ரகங்கள் அமெரிக்காவில் ஆதிக்கம்

Webdunia

செவ்வாய், 18 டிசம்பர் 2007 (14:37 IST)
சென்னிமலை பகுதியில் உற்பத்தியாகும் ரக துணி வகைகளுக்கு அமெரிக்கா மக்களிடம் அதிகமாக வரவேற்பு கிடைத்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் கைத்தறிகளிலும், விசைதறிகளிலும் பல ரகங்களில் பெட்சீட்டுகள், துண்டுகள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட அனைத்து வகையான துணிவகைகள் பலரகங்களில் பல்வேறு நூல் ரகங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்கின்றனர். இங்கு உற்பத்தியாகும் துணி வகைகள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதன் காரணமாக இப்பகுதி விசைத்தறி மற்றும் கைத்தறி கலைஞர்கள் வெளிநாட்டு மக்களின் ரசனைக்கேற்ப துணிகளை வடிவமைத்து வருகின்றனர்.இதனால் தொடர்ந்து ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைத்து வருகிறது.

கடந்த ஐந்து மாதத்திற்கு முன் சென்னிமலை பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் டிசைன் ரக துணி வகைகளுக்கு தற்போது அமெரிக்க கிறிஸ்துவ மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் அமெரிக்க கிறிஸ்துவர்கள் தங்கள் வீடுகளில் திரைத்துணிகள் முதல் கிச்சன் டவல், டேபிள் மேட், கை துடைக்கும் துண்டு என அனைத்து துணி வகைகளையும் மேலும் போர்வை, விரிப்பு, தலையணை உறைகள் என அனைத்து ரக துணிகளிலும் கிறிஸ்துவ மரம் இழை, தாத்தா என டிசைன் உள்ள துணிவகைகளை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

கிறிஸ்துவ விழாவிற்கு இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில், தற்போது அமெரிக்காவில் சென்னிமலை பகுதிகளில் இருந்து தயார் செய்து அனுப்பிய கிறிஸ்துவ துணி வகைகளை விரும்பி வாங்கி வருகின்றனர்.

இதனால் வரும் 2008ம் ஆண்டில் கூடுதல் எற்றுமதி ஆர்டர் கிடைக்கலாம் என ஏற்றுமதியாளர் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். சரிகை கொண்டு தயார்செய்த ரகங்கள் லாஸ்ஏஞ்சல், நியூயார்க் நகரங்களில் அதிகளவில் மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்