பெங்களூரூவில் ஜன. 19, 20ல் தேசிய ஜவுளி கண்காட்சி

புதன், 12 டிசம்பர் 2007 (12:00 IST)
இந்திய ஜவுளி தொழில் மேம்படுத்தும் வகையில் பெங்களூருவில் ஜனவரி 19 மற்றும் 20ம் தேதியில் தேசியளவில் டெக்ஸ் டிரேடு டுடே என்ற தலைப்பில் ஜவுளி கண்காட்சி நடக்கிறது.

இந்திய ஜவுளி தொழில் வளர்ச்சி கழகம் மற்றும் இந்தியா டுடே இணைந்து கண்காட்சியை நடத்துகின்றன. இதுகுறித்து ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கான கருத்தரங்கு நேற்று ஈரோட்டில் நடந்தது. இந்திய ஜவுளி தொழில் வளர்ச்சிக்கழக பொது செயலாளர் நாயர் பேசியதாவது,
தேசிய அளவில் முதல் முறையாக இக்கண்காட்சி இந்தியா டுடே குழுமத்துடன் இணைந்து பெங்களூரூவில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

3 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கண்காட்சி அமைக்கப்படுகிறது. ஜவுளி தொழிலில் நூல் உற்பத்தி முதல் ஆயத்த ஆடை வரை அனைத்து பிரிவுகளின் சார்பில் 30க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. இந்தியாவை சேர்ந்தவர்கள் மட்டுமே கண்காட்சியில் ஸ்டால்கள் அமைக்கின்றனர்.
நம் நாட்டை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கலந்து கொள்கின்றனர்.

19ம் தேதி காலை 10 மணிக்கு கண்காட்சி துவங்குகிறது. இதில் ஃபேஷன் ஷோ, சிறப்பு கருத்தரங்கு நடப்பதுடன், நவீன தொழில் நுட்பம் குறித்தும் பார்வையாளர்களுக்கு விளக்கப்படுகிறது. நமது நாட்டை சேர்ந்த ஏராளமான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். பார்வையாளர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை எ‌ன்று அவர் கூ‌றினா‌ர

பெடக்ஸில் தலைவர் மதிவாணன் பேசுகை‌யி‌ல், இந்திய ஜவுளி தொழில் வளர்ச்சி கழகம் ஜவுளி மேம்பாட்டுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஜவுளித் துறையில் ஏற்படும் பிரச்னைகளை மத்திய அரசிடம் எடுத்து சென்று தீர்த்து வைக்கிறது. குறிப்பாக டஃப் திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகள் நீடிக்க மத்திய அரசு உத்தரவிட்டதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இத்திட்டத்தின் கீழ் பழைய நவீன எந்திரங்களையும் கொள்முதல் செய்யலாம். தேசிய அளவிலான முதல் கண்காட்சி பெங்களூரூவில் நடக்கிறது. இக்கண்காட்சியில் ஸ்டால் அமைக்க பெடக்ஸில் உறுப்பினர்களுக்கு 20 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. கண்காட்சியிலேயே ஆர்டரும் வழங்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்