பாஸ்கோ எதிர்த்து ஆயுதம் தாங்கிய ஊர்வலம்!

திங்கள், 3 டிசம்பர் 2007 (17:03 IST)
ஒரிசா மாநிலத்தில் ஜெகட்சிங்பூர் மாவட்டத்தில் அமையவுள்ள பாஸ்கோ உருக்காலைக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இங்கு தென்கொரிய நிறுவனம் பாஸ்கோ, 1200 கோடி டாலர் முதலீட்டில் உருக்காலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கி உள்ளன.

இந்த பகுதியில் ஆதிவாசிகள் வாழும் பகுதியில் இரும்புத் தாது ஏராளமாக இருக்கின்றது. இதனை வெட்டி எடுத்து உருக்காலையை பாஸ்கோ நிறுவனம் அமைக்க இருக்கினறது. இதனால் ஆயிரக்கணக்கான ஆதிவாசிகள் இடம் பெயர வேண்டியதிருக்கும். இந்த பகுதியில் உருக்காலை அமைக்க கூடாது என ஆதிவாசிகள் போராடி வருகின்றனர்.

இவர்கள் பாஸ்கோ ஆலை எதிர்ப்பு சங்கம் என்ற பெயரில் ஒன்றிணைந்து போராடி வருகின்றனர். இதன் தலைமையில் நேற்று நூற்றுக்கணக்கான ஆதிவாசி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் தங்களின் பாரம்பரிய ஆயுதமான வில், அம்பு, வேல் ஆகியவற்றை ஏந்திக் கொண்டு பேரணியாக வந்தனர். இதனால் பாரதீப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.

இந்த பகுதியில் நிலங்களை அரசு ஆர்ஜிதம் செய்ய உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்கள் இந்த பகுதியில் பாஸ்கோ நிறுவன அதிகாரிகள், அரசு அதிகாரிகள் உள்ளே வருவதை தடுக்க பல இடங்களில் தடுப்புகளை அமைத்து உள்ளனர். சென்ற மாதம் இந்த பகுதியை பார்வையிட சென்ற மூன்று தென் கொரியர்கள் உட்பட நான்கு பாஸ்கோ உயர் அதிகாரிகளை எதிர்ப்பாளர்கள் கடத்தி சென்றனர்.

ஆதிவாசி மக்களுக்கம், அரசுக்கும் இடையே பிரச்சனை தீரும் வரை பாஸ்கோ அதிகாரிகள் இந்த பகுதியில் நுழைய மாட்டார்கள் என்று காவல் துறை உத்திரவாதம் கொடுத்தது. இதன் பிறகே பாஸ்கோ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற வியாழக்கிழமை நிலம் ஆர்ஜிதம் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ள பகுதியில் ஆலைக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே சிறு மோதல் ஏற்பட்டது. இதனால் சுமார் பதினைந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதற்கு பிறகு ஆலை அமைய உள்ள பகுதியான ஜெகட்சிங்பூர் பகுதியில் தொடர்ந்து எதிர்ப்பு போராட்டம் நடந்து வருவதால் ஏற்கனவே கடுமையான பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. இங்கு ஐந்து காவல் படைப்பிரிவினர் குவிக்கப் பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்