சிமென்ட் விலை எதிர்காலத்திலாவது நியாயமாக இருக்க வேண்டும் என்று தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை செயலாளர் அஜய் சங்கர் கூறினார்.
( மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் ஒரு பிரிவு தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை).
டெல்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசும் போது அஜய் சங்கர் கூறியதாவது, சிமென்ட் இறக்குமதி செய்ய எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிமென்ட் உற்பத்தி அதிகரித்துள்ளதால் எதிர்காலத்திலாவது சிமென்ட் விலை நியாயமாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது.
1989 ஆம் ஆண்டில் சிமென்ட் தொழில் துறைக்கு உள்ள எல்லா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன. இதே போல் 1991 ஆம் ஆண்டு ஜூலையில் சிமென்ட் ஆலை தொடங்க உரிமம் பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டது. இவை சிமென்ட் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்பதற்காக செய்யப்பட்டது. 2006-07 ஆம் ஆண்டில் சிமென்ட் ஆலைகள் 177 மில்லியன் டன் உற்பத்தி செய்யும் அளவுக்கு விரிவாக்கம் செய்துள்ளன என்று சங்கர் தெரிவித்தார்.
சிமென்ட் தொழில் துறையி்ன் முக்கியமான ஆய்வாளர் வருகின்ற ஜனவரி மாதத்தில் இருந்து சிமென்ட் விலைகள் உயரலாம் என்று கூறியிருக்கும் தருணத்தில், அஜய் சங்கர் சிமென்ட் விலை எதிர்காலத்திலாவது நியாயமாக இருக்க வேண்டும் என்று அரசு எதிர்பார்ப்பதாக கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.