கரிப் பருவத்தில் பருப்பு, தானியங்களின் விளைச்சல் அபரிதமாக இருக்கின்றது. இத்துடன் பொதுத்துறை நிறுவனங்கள் பற்றாக்குறையை ஈடுகட்ட பருப்பு வகைகளை அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகின்றன. இதனால் மொத்த சந்தையில் இவற்றின் விலை குறைந்து வருகிறது.
மும்பை சந்தையில் துவரம் பருப்பு, கடலை பருப்பு வரத்து அதிகளவில் இருப்பதால். இவற்றின் விலை குறைந்து வருகிறது.
இது குறித்து தேசிய விவசாய விளைபொருட்கள் கூட்டுறவு விற்பணை இணையத்தின் ( நஃபீட்) நிர்வாக இயக்குநர் அலோக் ரஞ்சன் கருத்து தெரிவிக்கையில், உளுத்தம் பருப்பு, பயத்தம் பருப்பு விலை ஏற்கனவே குறைந்து விட்டது. ரபி பருவத்தில் கடலை பருப்பு விளைச்சல் நன்றாக இருக்கின்றது. இது அதிகளவு விற்பனைக்கு வரும் போது, இதன் விலையும் குறையும்.
அதே நேரத்தில் தற்போது துவரம் பருப்பு விலை சிறது அதிகமாக இருக்கின்றது. இதன் விலை அதிகரிக்காது. செப்டம்பர் மாதத்தில் இருந்து உளுத்தம் பருப்பு, பயத்தம் பருப்பு விலை விலை குவின்டாலுக்கு ரூ.300 குறைந்துள்ளது. ஜலகான் சந்தையில் செவ்வாய் கிழமையன்று உளுத்தம் பருப்பு விலை குவின்டால் ரூ.3,200 ஆகவும், பயத்தம் பருப்பு விலை குவின்டால் ரூ. 3,000 ஆகவும் இருந்தது. கடலைபருப்பு விலை குவின்டாலுக்கு ரூ.200 குறைந்து குவின்டால் ரூ.2,800 ஆக விற்பனை செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.