மருத்துவக் கல்வியில் வசிப்பிட அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது.. தீர்ப்பை எதிர்த்து போராட்டம்..!

Mahendran

வெள்ளி, 14 மார்ச் 2025 (11:49 IST)
முதுநிலை மருத்துவ கல்வியில், மாநில அரசுகள் வசிப்பிட அடிப்படையில் தனிப்பட்ட இடங்களை ஒதுக்கிடக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மார்ச் 16ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் எம். அஜய் முகர்ஜி நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"எம்பிபிஎஸ் பாடப்பிரிவை தவிர, முதுநிலை மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் மாநில அரசுகள் வசிப்பிட அடிப்படையில் தனியாக இடங்களை வைத்துக் கொள்ள முடியாது. அனைத்து இடங்களும் அகில இந்திய அளவில் மாணவர்களுக்கு சமமான முறையில் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பு, மாநிலங்களின் உரிமைகள், கூட்டாட்சி கோட்பாடு, வகுப்புவாரியான இட ஒதுக்கீடு, அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் பெண்களின் கல்வி வாய்ப்புகளை பாதிக்கும் வகையில் உள்ளது.

இதனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மாநில உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில், மார்ச் 16ஆம் தேதி காலை 10 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் கண்டன போராட்டம் நடத்தப்படும்," என்று கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்