கச்சா எண்ணெய் உற்பத்தி நிலைப்படுத்தப்படும் : ஒபெக் அறிவிப்பு!
திங்கள், 19 நவம்பர் 2007 (17:11 IST)
புவி வெப்ப நிலை அதிகரிப்பதற்கான காரணிகளை குறைக்கும் நடவடிக்கை தொடரும். அதே நேரத்தில் உலகின் வளர்ச்சிக்குத் தேவையான கச்சா எண்ணெய் உற்பத்தி ஏற்றத் தாழ்வின்றி நிலைப்படுத்தப்படும் என்று கச்சா எண்ணெய் உற்பத்தி - ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு (ஒபெக்) உறுதியளித்துள்ளது.
இம்மாநாடு ஒபெக் அமைப்பு தொடங்கப்பட்ட 47 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக சவூதி அரேபியாவில் நடைபெறுகிறது. அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்த உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் உலக நாடுகளின் கோரிக்கையின் மீது எந்த முடிவும் இறுதித் தீர்மானத்தில் இடம் பெறவில்லை.
மாநாட்டில் பேசிய வெனிசுலா நாட்டு அதிபர், ஈரானை தாக்க அமெரிக்கா முயன்றால் கச்சா எண்ணெய் விலை இரட்டிப்பாகும் என்று எச்சரித்தார். மேலும், கச்சா எண்ணெயின் விலை உயர்வு 150 டாலராகவோ, ஏன் 200 டாலருக்கும் மேல் அதிகரிக்கும் நிலை ஏற்படலாம் என்றும் கூறினார். ஒபெக் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்காததே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 90 டாலருக்கும் அதிகமாக விலை உயர்ந்ததற்கு காரணம் என்று சர்வதேச சந்தையில் கருதப்படுகிறது.
கடந்த 12 மாதங்களுக்கும் மேலாக டாலரின் மதிப்பு ஈரோ, பிற நாணயங்களுக்கு எதிராக குறைந்து வந்துள்ளது. இதனால் டாலர் அடிப்படையில் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஒபெக் நாடுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இம்மாநாட்டில் அமெரிக்க டாலரை வலிவற்றதாக காட்டும் செயலில் ஈரான் ஈடுபட்டது.
இம்மாநாட்டில் எதிர்கால ஏற்றுமதியாளர்கள் குழுவின் வழிகாட்டு முறைகளில் கருத்து வேறுபாடு காணப்பட்டது. வெனிசுலா, ஈகுவேட்டார் ஆகியவை மீண்டும் ஒபெக் அமைப்பில் இம்மாநாட்டில் இணைந்தன. இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த செளதி அரேபிய மன்னர் அப்துல்லா பேசும் போது, கச்சா எண்ணெய் ஒருபோதும் பிரச்சனைக்கு காரணியாக இருக்கக் கூடாது. வளர்ச்சிக்கான காரணியாகவே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கச்சா எண்ணெய் விலையின் நிலைத்த தன்னைக்கு உலகில் அமைதி நிலவுவது இன்றியமையாதது என்று மாநாட்டு பிரகடனம் வலியுறுத்துகிறது. இம்மாநாட்டில் ஈரான், செளதி அரேபியா இடையே கருத்து வேறுபாடு உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. டாலரின் இறங்குமுகம் குறித்து இறுதி தீர்மானத்தில் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியது.
மாநாட்டிற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் அதிபர் மக்மூத் அகமதுநேஜாத், ஒபெக் நாடுகள் வேறு கரண்சிக்கு மாற விருப்பமாக உள்ளதாக தெரிவித்தார். ஆனால் செளதி அதிகாரிகள் டாலர் தொடர்பான கருத்து எதையும் பிரகடனத்தில் சேர்க்க மறுத்துவிட்டனர். அவ்வாறு சேர்க்கும் நிலையில் அது மேலும் டாலருக்கு எதிராக நெருக்கடியை உருவாக்கும் என்பதால் அதனைச் சேர்க்க செளதி மறுத்துவிட்டது என்று கூறப்படுகிறது.
புவி வெப்பமாவதைத் தடுக்க சுத்தமான கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய மேன்னையான தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டியதையும் முக்கியமாக குறிப்பிட்டுள்ளனர். வறுமைக்கு எதிரான போராட்டத்தில் கச்சா எண்ணெயின் முக்கியத்துவத்தையும் உணர்ந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச வளர்ச்சிக்கான இடைவெளியைக் குறைக்க சர்வதேச சமூகம் மேற்கொள்ளும் முயற்சிகளுடன் ஒபெக் நாடுகள் இணைந்து செயல்படும். சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் ஏழை-எளியவர்களுக்கும் எரிசக்தி கிடைக்க பாடுபடுவோம் என்றும் ஒபெக் பொதுச் செயலாளர் அப்துல்லா சலீம் எல்-பாத்ரி கூறினார்.
உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான செளதி அரேபியா, புவி வெப்பமடைதலைத் தடுக்க அமைக்கப்பட்டுள்ள பசுமை தொழில் நுட்ப நிதியத்துக்காக 300 மில்லியன் அமெரிக்க டாலரை நன்கொடையாக வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. அதே போன்று குவைத்தும் 150 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை வழங்குவதாக அறிவித்துள்ளது.