சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கும் திட்டம் இல்லை என்று மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் கூறியுள்ளார்.
மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதே போல் அமெரிக்காவில் இருந்து சோயா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் விலை அதிகரித்தாலும் அல்லது குறைந்தாலும் பாமாயில், சோயா எண்ணெய் விலைகளை மத்திய அரசு அறிவிக்கிறது. இந்த விலையின் அடிப்படையில் இறக்குமதி வரி விதிக்கிறது.
சமீபத்தில் கடந்த இரண்டு வாரமாக சர்வதேச சந்தையில் பாமாயில், சோயா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இதன் விலை ஏற்றத்தால் இறக்குமதி செய்யப்படும் சமையலெண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இவைகளின் விற்பனை விலை குறையும் வகையில் மத்திய அரசு இறக்குமதி வரி குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில் மத்திய அரசு பாமாயில், சோயா எண்ணெய் போன்ற சமையல் எண்ணெய்களின் இறக்குமதி வரியை குறைக்கும் திட்டம் இல்லை என்று மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் கூறினார்.
பொருளாதார பத்திரிக்கை ஆசியர்கள் மாநட்டில் கலந்து கொண்ட சரத் பவார், செய்தியாளர்களிடம் பேசும் போது இதை தெரிவித்தார். மத்திய அரசு இறக்குமதி வரியை கணக்கிடுவதற்கான பாமாயில், சோயா எண்ணெய் விலையை கடந்த ஜூலை 25 ந் தேதி அறிவித்தது. இதற்கு பின் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளன. சுத்திகரிக்காத பாமாயில் 1 டன் 130 டாலராகவும், சோயா எண்ணெய் விலை 200 டாலராகவும் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் சமையலெண்ணெய் விலை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.