மிஜோரமிற்கு சரக்கு விமானம்!

Webdunia

திங்கள், 12 நவம்பர் 2007 (14:24 IST)
மிஜோரம் மாநிலத்திற்கு சரக்கு விமானப் போக்குவரத்து துவக்கப்பட உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிஜோரோமிற்கு சரக்கு விமான போக்குவரத்து துவக்கப்படவுள்ளது.

ஏழு சகோதரிகள் என அழைக்கப்படும் 7 வட கிழக்கு மாநிலங்களில் மிஜோரோமும் ஒன்று. இமயமலையில் அமைந்திருக்கும் இந்த மாநிலம் மியான்மர், வங்காள தேசம் ஆகிய இருநாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது.

இதுவரை இந்த மாநிலத்திற்கான சரக்கு போக்குவரத்து சாலை மார்க்கமாகவே நடந்து வருகிறது. இம்மாநில பொருளாதாரத்தை மேம்படைய செய்யும் வகையில் மாநில அரசு சரக்கு விமான போக்குவரத்து சேவை துவக்கப்பட வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரி வருகிறது.

இம்மாநில முதலமைச்சர் ஜோராம் தங்கா சமீபத்தில் டில்லி சென்றிருந்த போது, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் அதிகாரிகளை சந்தித்து, லிங்பூய் விமான நிலையத்தில் சரக்கு விமான போக்குவரத்து சேவை துவக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அத்துடன் கல்கத்தாவில் இருந்து மிஜோரோமின் லிங்யூய் விமான நிலையத்திற்கு சரக்கு விமானத்தில் அனுப்பப்படும் சரக்குகளுக்கு கட்டண சலுகை வழங்க வேண்டும். இந்த விமான நிலையத்தில் மழை, பனி காலங்களிலும் விமானங்கள் தரை இறங்க வசதியாக விமான ஓடு பாதையில் விளக்குகள் அமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து நேற்று முதலமைச்சர் ஜோராம் தங்கா, விமான போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் குழு லிங்பூய் விமான நிலையத்தை பார்வையிட்டனர். சரக்கு விமான போக்குவரத்து துவக்குவதற்கான சாத்தியக் கூறுகளை பற்றி ஆராய்ந்தனர்.

விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விமான நிலையத்தின் ஓடு பாதையின் நீளம் தற்போது 8,200 அடியாக இருக்கிறது. சரக்கு விமான போக்கு வரத்து சேவை துவக்கப்பட வேண்டும் என்றால், ஓடு பாதையின் நீளத்தை 9,500 அடியாக அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்த விமான நிலைய பகுதியில் வடகிழக்கு மாநில சிறப்பு நிதி உதவி திட்டத்தின் கீழ் சாலைகள், விமான அலுவலகத்தை விரிவு படுத்தல், விமான நிலைய ஊழியர்களுக்கான குடியிருப்புகள், பாதுகாவலர்களுக்கான அறைகள் ஆகியவற்றை மாநில பொதுப் பணித் துறை ரூ.658 கோடி செலவில் அமைத்து வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மிஜோரம் மாநிலத்திற்கு சரக்கு விமான போக்கு வரத்து துவக்குவதன் மூலம் இந்தியாவிற்கும் மியான்மர், வங்காள தேசம், சீனா ஆகிய நாடுகளுக்கு சாலை வழியாக ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்