ஏற்றுமதியாளர்களுக்கு சலுகை : அரசு பரிசீலனை!

Webdunia

வெள்ளி, 2 நவம்பர் 2007 (20:07 IST)
மத்திய அரசு ஏற்றுமதியாளர்களுக்கு சலுகை வழங்குவது பற்றி பரிசீலிக்கும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருவதால், ஏற்றுமதியாளர்களுக்கு நஷ்டம் ஏற்டுகிறது. இந்த நஷ்டத்தை ஈடு கட்ட மத்திய அரசு ஏற்றுமதியாளர்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நேற்று டில்லியில் ஹெச்.இ.எல் நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்தார். இந்த விழாவிற்கு வந்த கமல்நாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருவதால், ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படும் சுமையை குறைக்க, அவர்கள் செலுத்திய வரியை திருப்பி தருதல் உள்ளிட்ட சலுகைகளை வழங்குவது பற்றி மத்திய அமைச்சரவை கூடிய விரைவில் பரிசீலிக்கும் என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த நிதியாண்டில் ஏற்றமதி இலக்கான 160 பில்லியன் டாலரை எட்டிவிட முடியும். ஏற்றுமதி குறையும் வாய்ப்பு இல்லை. ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதத்தில் 72 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. எனவே ஏற்றுமதிக்கான இலக்கை எட்டிவிட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்றுமதி வர்த்தகத்தில் போட்டி அதிகமாக இருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பது ஏற்றமதிக்கு பிரச்சனைதான். ஆனாலும் ஏற்றுமதிக்கான இலக்கை குறைக்க வேண்டிய அவசியமில்லை.

நான் நவம்பர் மாதத்தில் ஏற்றுமதியாளர்களுக்கு எந்தெந்த சலுகைகள் வழங்க முடியும் என்பது பற்றி பரிசீலனை செய்வதற்கு கூட்டம் நடத்த உள்ளேன். அதற்கு பிறகு மத்திய அமைச்சரவையும், அரசும் சலுகைகள் வழங்குவது பற்றி பரிசீலிக்கும்.

இவை ஏற்றுமதியாளர்கள் செலுத்திய வரி, கட்டணத்தை அரசு அவர்களுக்கு திருப்பி வழங்குவதாக இருக்கும் என்று கமல்நாத் கூறினார்.

இந்த சலுகை குறிப்பிட்ட துறை வாரியாக வழங்கப்படுமா என்று கேட்டதற்கு, இது குறிப்பிட்ட துறைக்கு மட்டும் வழங்கப்படும், குறிப்பாக அதிகளவு வேலை வாய்ப்பை வழங்கும் துறைக்கும், சர்வதேச சந்தையில் இது வரை நாம் உருவாக்கியுள்ள சந்தையின் அளவு குறையாமல் இருக்கும் படி சலுகைகள் அறிவிக்கப்படும் என்று கமல்நாத் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்