சென்செக்ஸ் 20,000 புள்ளிகளை‌த் தாண்டியது!

Webdunia

திங்கள், 29 அக்டோபர் 2007 (17:33 IST)
ஏற்றத்தையும் சரிவையும் மாறி மாறிச் சந்தித்துவந்த பங்குச் சந்தை வர்த்தகத்தில் இன்று மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது!

மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் வர்த்தகம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே, சென்செக்ஸ் குறியீட்டு எண் 549 புள்ளிகள் அதிகரித்து 19,792.51 புள்ளிகளை தொட்டது.

மும்பை பங்குச் சந்தையில் இதுவரை இல்லாத அளவிற்கு, இன்று ஒரு நிலையில் சென்செக்ஸ் 19,859.47 புள்ளிகளாக அதிகரித்தது.

மதிய இடைவேளைக்கு பிறகு 20 ஆயிரம் புள்ளிகளை தாண்டி 20,025 புள்ளிகளை எட்டியது.

இதற்கு முன் கடந்த வெள்ளிக்கிழமை (26ஆம் தேதி) 19,276.45 புள்ளிகளை தொட்டது. அதற்கு முன் கடந்த 18ஆம் தேதி 19,198.66 புள்ளிகளை தொட்டது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளான கிராசிம், ஹெச்.டி.எப்.சி, ஹுன்டால்கோ, இன்போசியஸ், டி.சி.எஸ், ஐ.டி.சி, எல்.அண்ட் டி, மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, என்.டி.பி.சி, ரான்பாக்ஸி, ரிலையன்ஸ் எனர்ஜி, சத்யம், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், டாடா மோட்டார், விப்ரோ, ஏ.சி.சி, ஏ.சி.எல், பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், பி.ஹெச்.இ.எல், சிப்லா, டாக்டர் ரெட்டி, ஹெச் டி.எப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தது.

நாளை ரிசர்வ் வங்கி பொருளாதார கொள்கையை அறிவிக்க உள்ளது. இந்த எதிர்பார்ப்பில் வங்கிகளின் பங்கு விலை அதிகரித்தது.

மற்ற ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் பங்குகளின் விலை அதிகரித்த காரணத்தினால், அதன் குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

இதற்கு முன் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் ஆயிரத்தை எட்டிய விவரம்:

15 அக்டோபர் 2007 19,000
09 அக்டோபர் 200718,000
26 செப்டம்பர் 200717,000
19 செப்டம்பர் 2007 16,000
06 ஜூலை 200715,000
05 டிசம்பர் 200614,000
30 அக்டோபர் 200613,000
20 ஏப்ரல் 200612,000
21 மார்ச் 200611,000
06 பிப்ரவரி 200610,000
28 நவம்பர் 20059,000
08 செப்டம்பர் 20058,000
20 ஜூன் 20057,000
11 பிப்ரவரி 20056,000
08 அக்டோபர் 19995,000
30 மார்ச் 1992 4,000
29 பிப்ரவரி 19923,000
15 ஜனவரி 1992 2,000
25 ஜூலை 19901,000

வெப்துனியாவைப் படிக்கவும்