மும்பை பங்குச் சந்தை குறியீடு 19,000 தாண்டும்?

Webdunia

திங்கள், 15 அக்டோபர் 2007 (14:16 IST)
பங்குச் சந்தையில் காலை முதல் பங்குகளின் விலை தொடர்ந்து அதிகரிக்கின்றது.

மும்பை பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் விறுவிறுப்பாக தொடங்கியது. காலையிலேயே 106 புள்ளிகள் (வெள்ளிக்கிழமை இறுதி நிலவரத்தை விட) அதிகரித்தது. மதியம் 2.00 மணியளவில் சென்செக்ஸ் 18,940 புள்ளிகளை தொட்டது. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 521.19 புள்ளிகள் அதிகம்.

இன்று மாலைக்குள் சென்செக்ஸ் 19,000 புள்ளிகளை தாண்டிவிடும் என்ற எதிர்பார்ப்பு பங்குச் சந்தையின் பல மட்டங்களிலும் நிலவுகிறது.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், பரஸ்பர நிதி நிறுவனங்கள் அதிகளவு பங்குகளை வாங்கின.

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தால் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும், இடது சாரிகளுக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்துள்ளது. சென்ற வாரம் நிலவிய அரசியல் அரங்கில் நிலவிய பதற்றம் இப்போது இல்லை.

அத்துடன் தொழில் துறை உற்பத்தி அதிகரிப்பு, நேற்று முன் தினம் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசும் போது, வரப்போகும் பட்ஜெட் சென்ற ஆண்டு பட்ஜெட் போன்றே இருக்கும் என்று கூறி தொழில் துறையினருக்கு நம்பிக்கை ஊட்டியது ஆகிய காரணங்களால் பங்குகளின் விலைகள் அதிகரித்து சென்செக்ஸ் குறியீட்டு எண் உயர்ந்தது.

நடுத்தர முதலீடு நிறுவனங்களின் குறியீட்டு எண் மிட் கேப், சிறிய நிறுவனங்களின் குறியீட்டு எண் சுமால் கேப் ஆகியவற்றின் குறியீட்டு எண்களும் அதிகரித்தன எல்லா பிரிவு பங்குகளின் விலைகளும் அதிகரித்தன.

இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் இருந்தே பங்குகளின் விலை அதிகரித்தது. காலையிலேயே நிப்டி 102 புள்ளிகள் அதிகரித்தது. நண்பகல் 12.30 மணியளவில் 6000 புள்ளிகளைத் தாண்டியது.

இந்திய பங்கச் சந்தை போன்றே, மற்ற ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் பங்குகளின் விலை உயர்ந்ததது. ஜப்பான் பங்குச் சந்தை நிக்கி 0.19 விழுக்காடும், ஹாங்காங் 0.79 விழுக்காடும், சிங்கப்பூர் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 0.11 விழுக்காடும் அதிகரித்தன. தென் கொரியாவின் சியோல் காம்போஸிட் 0.11 விழுக்காடு குறைந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையின் குறியீடுகளும் அதிகரித்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்