மத்திய அரசு கரும்பு சாறில் இருந்து நேரடியாக எதனால் உற்பத்தி செய்யலாம் என்று அனுமதி அளித்துள்ளதால் சர்க்கரை ஆலைகளின் வருவாய் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமையன்று கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு, இந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் பெட்ரோலில் 10 விழுக்காடு எத்தனால் சேர்க்கலாம் என அனுமதி கொடுத்துள்ளது.
அத்துடன் அடுத்த வருடம் அக்டோபர் மாதம் முதல் கட்டாயமாக பெட்ரோலில் 10 விழுக்காடு எதனால் சேர்க்கப்பட வேண்டும் என்றும் முடிவெடுத்துள்ளது.
தற்போது சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத வகையில் பெட்ரோல், டீசலில் 5 விழுக்காடு எத்தனால் சேர்க்கப்படுகிறது.
பெட்ரோலை எரிபொருளாக கொண்ட வாகனங்கள் வெளியிடும் புகையில் கலந்துள்ள சல்ஃபர், கரியமில வாயு ஆகியவைகளினால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தவிர்க்கவே எதனால் சேர்க்கப்படுகிறது.
முன்பு சர்க்கரை ஆலைகள் சர்க்கரை தயாரித்த பிறகு கிடைக்கும் கழிவு பாகில் இருந்து எதனால் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தன.
கரும்பு சாறில் இருந்தே எதனால் தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று சர்க்கரை ஆலைகள் அரசிடம் கோரிவந்தன.
இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு மத்திய அரசு கரும்பு சாற்றில் இருந்து நேரடியாக எதனால் தயாரிக்க அனுமதி வழங்கி உள்ளது.
அத்துடன் அடுத்த வருடம் அக்டோபர் மாதத்தில் கட்டாயமாக பெட்ரோலில் எதனால் கலக்கும் அளவை 10 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு சர்க்கரையை இருப்பு வைக்கும் அளவை இருமடங்காக அதிகரித்துள்ளது. தற்போது இருப்பு வைக்கும் அளவை 50 இலட்சம் டன்னாக அதிகரித்துள்ளதால், விற்பனையாகமல் தேங்கி கிடக்கும் சர்க்கரையை அரசு வாங்கிக் கொள்வதால் சர்க்கைரை ஆலைகளின் வருவாய் அதிகரிக்கும்.
சென்ற வருடம் சர்க்கரை உற்பத்தி அதிகரித்ததால், சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு கரும்புக்கான கொள்முதல் விலையை கொடுக்காமல் பாக்கி வைத்துள்ளன. சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு பணம் வழங்குவதற்காக குறைந்த வட்டியில் வங்கிகள் குறுகிய கால கடனை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
சர்க்கரை ஏற்றுமதி செய்வதற்கு அரசு 1 டன்னுக்கு போக்குவரத்து மானியமாக ரூ.1,450 வழங்கி வருகிறது. இந்த மானியம் மார்ச் வரை மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தது. இப்போது இதை அடுத்த வருடம் (2009 ) ஏப்ரல் வரை நீடித்துள்ளது.
இது போன்ற காரணங்களினால் சர்க்கரை ஆலைகளின் வருவாய் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் இந்த நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்து வருகிறது.
இந்த வருடம் செப்டம்பருடன் முடிவடையும் சர்க்கரை ஆண்டில் 290 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் சர்க்கரை தேவை ஆண்டிற்கு 190 லட்சம் டன்.
இந்த வருடம் செப்டம்பர் மாதம் இறுதியில் 120 லட்சம் டன் சர்க்கரை இருப்பில் உள்ளது.