சிறு கடன் உதவி நிறுவனங்களை முறைப்படுத்தப்படும் மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும். இலாப நோக்கில் செயல்படாத சிறு கடன் உதவி நிறுவனங்களை முறைப்படுத்த சாதகமான ஆலோசனைகளை மத்திய அரசு வரவேற்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
டில்லியில் நான்காவது சிறு கடன் நிதி நிறுவனங்களின் மாநாடு நடைபெறுகிறது. இதை சிதம்பரம் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
பொருளாதார வளர்ச்சியில் சுய உதவி குழுக்களின் பங்கை பாராட்டிய சிதம்பரம் இதுவரை இலாப நோக்கில் செயல்படாத சிறு கடன் நிதி நிறுவனங்களை முறைப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால், அறிமுகப்படுத்த உள்ள மசோதாவால் பயன் இருக்காது என கருத கூடாது என்று கூறினார்.
அவர் மேலும் பேசும் போது, இந்த நிறுவனங்களை முறைப்படுத்துவதால் அவைகளுக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் கிடைக்கும். இவைகளை முறைப்படுத்தும் போது இந்த மாநாட்டில் சமர்பிக்கப்பட்ட அறிக்கைகளை அரசு கவனமாக பரிசீலிக்கும்.
வங்காள தேசத்தில் " கிரமின் வங்கி " வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. இந்தியாவிலும் இதே முறையை கடைப்பிடிக்கலாமா அல்லது மாற்றங்கள் செய்ய வேண்டுமா என்பதை நிபுணர்கள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
நிதி நிறுவனங்களை முறைப்படுத்த ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட ரங்கராஜன் கமிட்டியின் அறிக்கை கிடைத்த பிறகு, இதில் உள்ள பரிந்துரைகளை அரசு அமல்படுத்தும்.
கேரளாவில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் தான் 100 விழுக்காடு பொருளாதார உதவி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வெற்றியை தொடர்ந்து பல மாவட்டங்களில், இதேமுறை பின்பற்றப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக சுய உதவி குழுக்கள் மூலமாக சிறு கடன் வழங்குவது வருடத்திற்கு 40 விழுக்காடு அதிகரித்துள்ளது. சுய உதவி குழுக்களுக்கு பொதுத் துறை வங்கிகள் கடன் வழங்கி வருகின்றன.
சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்க, சமூக கடன் உதவி நிறுவனங்கள், புதிதாக உருவாகியுள்ள சிறு கடன் நிறுவனங்கள், அத்துடன் சர்வதேச அளவிலான சிறு கடன் உதவி நிறுவனங்கள் ஆகியவை கடன் வழங்குவதற்கு ஆர்வம் காண்பிக்கின்றன என்று சிதம்பரம் கூறினார்.