சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு இல்லை : கமல்நாத்!

Webdunia

திங்கள், 8 அக்டோபர் 2007 (18:47 IST)
அந்நிய நேரடி முதலீடு சில்லரை வணிகத்தில் அனுமதிக்கப்பட மாட்டாது என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.

“சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு அனுமதிப்பது தொடர்பான ஆய்வு நடந்து வருகிறது. இதன் அறிக்கையை எதிர்பார்த்துள்ளோம். நாட்டின் முதுகெலும்பாக சிறு வியாபாரிகள் உள்ளனர். இதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம” என்று அமைச்சர் கமல்நாத் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டின் நன்மையை கருதி, மாநில அரசுகளை சில்லரை விற்பனை துறையில் பெரிய நிறுவனங்களை (வெளிநாட்டு மற்றம் உள்நாட்டு பெரிய நிறுவனங்கள்) அனுமதிக்கும்படி கூற முடியாது என்றார்.

பெரிய வர்த்தக நிறுவனங்களை சில்லரை விற்பனை துறையில் அனுமதிப்பதால், சிறு வியாபாரிகளுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி ஆராய ஐ.ி.ஐ.இ.ஆர். அமைப்பிடம், வர்த்தக அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதன் அறிக்கை ஒரு மாதத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என்று கமல்நாத் கூறினார்.

பெரிய நிறுவனங்கள் சில்லரை விற்பனை கடைகள் திறப்பதற்கு பல மாநிலங்களில் சிறு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் வருடத்திற்கு ரூ.13 லட்சத்து 20 ஆயிரம் கோடி வியாபாரம் நடக்கும் சில்லரை விற்பனை துறையில் அந்நிய நாட்டு சங்கிலித் தொடர் சூப்பர் மார்க்கெட்டுகள், உள்நாட்டு பெரிய நிறுவனங்கள் சங்கிலித் தொடர் போல் கடைகளை திறக்க அனுமதிப்பதற்கு பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக மத்தியில் ஆளும் ஐக்கிய முன்னனி கூட்டணி அரசுக்கு ஆதரவு கொடுத்தது வரும் இடது சாரி கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் சில்லரை விற்பனை துறையில், அந்நிய நிறுவனங்களுக்கும், உள்நாட்டின் பெரிய நிறுவனங்களை அனுமதிப்பதற்கு தயக்கம் காட்டி வருகிறார்.

மத்திய அரசு ரொக்கப் பணத்திற்கு பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை திறப்பதற்கு 100 விழுக்காடு அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்து உள்ளது. அதேபோல் ஒரே வர்த்தக பெயரில் உள்ள பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை திறக்க 51 விழுக்காடு அந்நிய முதலீட்டை அனுமதித்து உள்ளது.

அமெரிக்கா போன்ற நாடுகளில் சில்லரை விற்பனை துறையில் கொடி கட்டி பறக்கும் வால் மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவைச் சேர்ந்த உள்நாட்டு பெரிய வர்த்தக நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து கடைகளை திறக்க ஆர்வமாக உள்ளன.

சர்வதேச அளவில் சிலலரை வர்த்தகத்தை பற்றி ஆய்வு செய்துவரும் நிறுவனமான ஏ.டி.கியார்னி நிறுவனம் 2006 இல் வெளியிட்ட எதிர்கால சில்லரை விற்பனை வாய்ப்புகள் குறித்த ஆய்வு அறிக்கையில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இதன் ஆய்வறிக்கையில், இத்துறையில் அமைப்பு ரீதியாக உள்ள மற்றும் அமைப்பு ரீதியாக இல்லாத கடைகள் வாயிலாக நடக்கும் விற்பனை 2010 ஆம் ஆண்டில் 427 பில்லியன் டாலராகவும், 2015 ஆம் ஆண்டில் 637 பில்லியன் டாலராகவும் வளர்ச்சி பெறும் என்று தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்