தேயிலையை ஏற்றுமதி செய்ய ரஷ்யாவிற்கும், இந்தியாவிற்கும் இடையே ஒப்பந்தம் மாஸ்கோவில் வியாழக்கிழமையன்று கையெழுத்தானது.
இந்தியாவில் இருந்து தேயிலை கணிசமான அளவு பிரிவு ஏற்படாத முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. சோவியத் யூனியன் பல நாடுகளாக பிரிந்த பிறகும் ரஷியா, அஜர்பைஜான், கஜகஸ்தான், பைலோ ரஷ்யா, கிர்கிஸ்தான் போன்ற நாடுகளுக்கும் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டன.
ஆனால் 2001 ஆம் ஆண்டு தரம் குறைந்த தேயிலையை இந்திய ஏற்றுமதியாளர்கள் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்தனர். இதனால் இந்திய தேயிலையின் தரம் பற்றி ரஷ்ய மக்களிடையே தவறான எண்ணம் ஏற்பட்டது. இந்தியாவில் இருந்து தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு ரஷ்யா நிபந்தனைகளை விதித்தது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி இலங்கை அதிகளவு ஏற்றுமதி செய்து, ரஷ்யாவில் நிலையான சந்தையை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்திய அரசு மீ்ண்டும் ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. இதற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது.
இந்திய தேயிலை வாரியத்திற்கும், ரஷ்யாவைச் சேர்ந்த ரோசாய்கோபி சங்கத்திற்கும் இடையே முதல் தர தேயிலையை ஏற்றுமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் வியாழக்கிழமையன்று மாஸ்கோவில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் சார்பில் தேயிலை வாரிய தலைவர் பாசுதேவ் பானர்ஜியும், ரஷ்யா சார்பில் ரோசாய்கோபியின் தலைமை இயக்குநர் ரோமாஜ் சன்டுரியாவாவும் கையொப்பமிட்டனர். ( இது ரஷியாவின் தேயிலை இறக்குமதியாளர்கள், விற்பனையாளர்கள் உறுப்பினர்களாக உள்ள சங்கம் )
ரஷ்யாவிற்கு தேயிலை ஏற்றுமதி செய்வதற்காக, ரஷ்யா சென்றுள்ள தேயிலை வாரியத் தலைவருடன், ரஷ்யாவிற்கு இந்தியாவைச் சேர்ந்த 20 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிகள் குழு வந்துள்ளது. இதில் அஸ்ஸாம், டார்ஜிலிங், நீலகிரியைச் சேர்ந்த தேயிலை தோட்டத்தை சேர்ந்தவர்கள், தேயிலையை பதப்படுத்துபவர்கள், ஏற்றுமதியாளர்கள் மாஸ்கோவிற்கு வந்துள்ளனர். இவர்கள் ரஷ்ய ஏற்றுமதியாளர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, ரஷ்யாவில் கூட்டு முயற்சியில் உயர்ரக தேயிலையை விற்பனைக்கு அனுப்பும் அளவிற்கு சிப்பங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கும் தொழிற்சாலையை அமைப்பது, இந்திய தேயிலை தோட்டங்களில் ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனங்கள் முதலீடு செய்வது உள்ளிட்ட பல முடிவுகள் எடுக்கப்பட்டன.
ரஷ்யா வருடத்திற்கு 16 கோடியே 70 இலட்சம் கிலோ தேயிலையை இறக்குமதி செய்கிறது. இதில் சிறிலங்காவின் பங்கு 39 விழுக்காடாக உள்ளது. முன்பு இந்தியாவில் இருந்து அதிகளவு இறக்குமதி செய்யப்பட்டது. 2001 ஆம் ஆண்டு தேயிலையின் தரம் பற்றிய சர்ச்சை எழுந்த பிறகு, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் அளவு 20 விழுக்காடாக குறைந்து விட்டது.
தற்போது ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் மீண்டும் இந்தியாவில் இருந்து அதிகளவு தேயிலையை ரஷியா இறக்குமதி செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தும்.
அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பல தேயிலை தோட்டங்கள் நலிவடைந்து, மூடப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் தேயிலைக்கு கட்டுப்படியான விலை கொடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை வலியுறுத்தி பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி, அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியை செய்து வருகின்றனர்.
இந்த ஒப்பந்தத்தால் மந்தமாக உள்ள இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி மீண்டும் அதிகரிக்கும். மேற்கு வங்காளம், அஸ்ஸாம், நீலகிரி பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள் புத்துயிர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி தடைபட்டதால் தேயிலை விலை சரிந்தது.