உலகளாவிய அளவில் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் காரணமாக பெரும் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்ற காரணத்தினால் மும்பை பங்குச் சந்தைக் குறியீடு இன்றைய வணிக துவக்கத்திலேயே 400 புள்ளிகளுக்கும் மேலாக சரிந்தது!
கடந்த வெள்ளிக்கிழமை ஒரு நாள் வர்த்தகத்தில் 152 புள்ளிகள் உயர்ந்த பங்குச் சந்தைக் குறீயிடு இன்றைய வர்த்தகத்தின் துவக்கத்திலேயே 433 புள்ளிகள் குறைந்து 14,706 புள்ளிகளுக்குச் சரிந்தது.
தேச பங்குச் சந்தை (நிஃப்டி) குறியீடு 121 புள்ளிகள் குறைந்து 4,267 புள்ளிகளுக்குச் சரிந்தது.
அதிக விலைப் பங்குகளான இண்டால்கோ, எல் அண்ட் டி, ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ், பெல், அம்புஜா, மாருதி ஆகியவற்றின் விலைகள் பெரிதும் குறைந்துள்ளது.
இந்தச் சரிவு தற்காலிகமானதுதான் என்றும், விரைவில் பங்குகளின் விலைகள் மீண்டும் உயரும் என்றும், அவசரப்பட்டு முதலீடுகளைத் திரும்பப் பெறத் தேவையில்லை என்றும் பங்குச் சந்தை வட்டாரங்கள் கூறியுள்ளன.
சற்றுமுன் நிலவரப்படி மும்பை பங்குச் சந்தைக் குறியீடு 100 புள்ளிகள் வரை அதிகரித்து 14,800 புள்ளிகளை எட்டியுள்ளது.