மியூச்சுவல் பண்ட்: ரூ.50 ஆயிரம் வரை பான் எண் தேவையில்லை
வியாழன், 18 ஜூன் 2009 (17:16 IST)
மியூச்சுவல் பண்ட் யூனிட்டுகளில் ரூ.50 ஆயிரம் வரை முதலீடு செய்ய பான் அட்டை எண் தேவையில்லை என்று மத்திய அரசு சம்மதித்துள்ளது.
மியூச்சுவல் பண்ட், பங்குச் சந்தை போன்றவைகளில் முதலீடு செய்ய வேண்டும் எனில் வருமான வரி துறையில் பதிவு செய்து கொண்டதற்கான எண் குறிப்பிட வேண்டும். வருவான வரி துறையில் பதிவு செய்து கொள்வதற்கு பெர்ஷனல் அக்கவுண்ட் நம்பர் விபரத்துடன் பான் அட்டை கொடுக்கப்படுகிறது. இந்த எண் இருந்தால் மட்டுமே மியூச்சுவல் பண்ட் யூனிட்டுகளில் பதிவு செய்ய முடியும் என்று உள்ளது.
தற்போது அரசு பான் எண் இல்லாமலே மாதாந்திர சேமிப்பு மியூச்சுவல் திட்டத்தில் முதலீடு செய்ய அனுமதி வழங்கியுள்ளது.
மாதா மாதம் குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் பண்ட் யூனிட்டுகளில் முதலீடு செய்யும் திட்டம் உள்ளது. இந்த திட்டம் சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்று அழைக்கப்படுகிறது. இதை சுருக்கமாக எஸ்.ஐ.பி என்று கூறுகின்றனர்.
இந்த திட்டத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை முதலீடு செய்ய பான் எண் தேவையில்லை என்று அரசு கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளதாக மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் சங்க தலைவர் ஏ.பி.குரியன் தெரிவித்தார்.
மும்பையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மியூச்சுவல் பண்ட கருத்தரங்கில் கலந்து கொண்ட குரியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசிடம் இருந்து பான் எண் குறிப்பிடாமல் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான அனுமதியை கொள்கை அளவில் பெற்றுள்ளோம். இதற்கான உத்தரவு விரைவில் அரசு பிறப்பிக்கும். மாதாந்திர தவணையில் ரூ.50,000 வரை முதலீடு செய்வதற்கு பான் எண் தேவையில்லை என்பது வரவேற்கத்தக்கது. இது மியூச்சுவல் பண்ட்டுகளில் முதலீடு அதிகரிக்க உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
பங்குச் சந்தையை கண்காணிக்கும் செபி, 2007 ஆம் ஆண்டு பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்ய கட்டாயம் பான் எண் குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிட்டது.
மியூச்சுவல் பண்ட் யூனிட்டுகளில் முதலீடு செய்ய பான் எண் அவசியம் என்ற உத்தரவால், சிறு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முடிவதில்லை. பான் எண் அவசியம் என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதனால் பல சிறு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முடிவதில்லை என்று செபியிடம், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர்.