நிதி ஆணைய‌த் தலைவராக கேல்கர் நியமனம்

Webdunia

வியாழன், 15 நவம்பர் 2007 (11:09 IST)
13 வது நிதி ஆணைய‌த் தலைவராக முன்னாள் நிதித் துறை செயலாளரும், நிதி அமைச்சரின் ஆலோசகருமான டாக்டர் விஜய் கேல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிதி ஆணைய‌ம் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான வரிவருவாய் பங்கீடு குறித்த அறிக்கையை அரசுக்கு அளிக்கும். 2005 -2010 ஆம் ஆணடுக்குள் மாநில் அரசுகளின் கடனை குறைத்து, அவைகளின் நிதி நிலையை சீரமைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அரசுக்கு பரிந்துரைக்கும்.

மாநிலங்களுக்கு இடையிலான சமச்சீர் வளர்ச்சிக்கு பொருளாதார வளங்களை பெருக்க வேண்டிய ஆலேசனைகளை வழங்கும். தற்போது இய‌ற்கை பேரிடர் நிர்வாகத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை பரிசீலனை செய்து இதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி தெரிவிக்கும்.

முந்தைய 12 வது நிதி ஆணைய‌‌ம் போன்றே, இந்த 13 வது நிதி ஆணைய‌மும் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாய், மாநில அரசுக்கு கிடைக்கும் வருவாய் போன்ற அம்சங்களையும் கொள்வதுடன், அவைகளின் நிதி ஆதாரங்களை அதிகரிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் பரிந்துரைக்கும்.

2010 ஆம் ஆண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட உள்ள சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி பரிசீலிக்கும். குறிப்பாக இந்த சட்டத்தால் வெளிநாட்டு வர்த்தகத்தில் ஏற்படும் மாற்றங்களை பரிசீலிக்கும்.

இந்த ஆணைய‌த்‌தின் உறுப்பினர்களாக தேசிய நிதி மற்றும் நிதிக் கொள்கை பயிற்சி மையத்தின் பேராசிரியர் டாக்டர் இந்திரா ராஜாராமன், என்.சி.ஏ.இ.ஆர் அமைப்பின் தலைமை பொருளாதார அறிஞர் டாக்டர் அபுசலிப் ஷெரிப், ராஜீவ் காந்தி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் அதுல் சர்மா ஆகியோர் முழு நேர உறுப்பினர்களாகவும் திட்ட குழு உறுப்பினர் பி.கே.சதுர்வேதி பகுதி நேர உறுப்பினராகவும் இருப்பார்.

இந்த நிதி ஆணைய‌‌ம் அளிக்கும் பரிந்துரை 2010 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும். இதன் பரிந்துரை 2009ஆ‌ம் ஆண்டு அக்டோபர் இறுதியில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்